மாணவர் களுடன் தொடர்ந்து பயணிப் போம்.சட்டத் தரணி மணிவண்ணன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கிக் கறுப்புக் கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினைத் தெரிவித்து, அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
கறுப்புக் கொடியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் சுமார் 5 மணி நேரம் வியாழக்கிழமை (19) விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, அவர்களுக்கான சட்டப் பிரதிநிதித்துவத்தை மூத்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழங்கி இருந்தார்.
மாணவர்கள் மீதான பொலிஸாரின் விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமான செயற்பாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது அவர்களின் உணர்வுபூர்வமான விடயம்.
அது மாத்திரமின்றித் தமிழ் மக்களின் உணர்வோடும் உரிமையோடும் சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களாக அவர்கள் பங்களிக்கின்றனர்.
எனவே நியாயபூர்வமான மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராகப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்கி, இன்றைய தினம் விசாரணையின் போது மாணவர்களுக்கான சட்டப் பிரதிநிதித்துவத்தையும் வழங்கினேன்.
பொலிஸார் இன்றைய மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு பெற்ற வாக்குமூலங்களைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி, அவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.

