சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மட்டு. கொலை, சந்தேக நபர்களுக்கு விரைவில் உயரிய தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்…

மட்டு கொலை, கொள்ளைச் சம்பவ சந்தேக நபர்களுக்கு விரைவில் உயரிய தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய வேண்டும் எனக் கோரியும், சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்றைய தினமும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் 20ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 04 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவருக்கு எதிர்வரும் 27ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதவானால் பிறப்பிக்கப்பட்டதையடுத்து இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பது வட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் என முதற்கட்ட விசாரணைகளில் அறிய வந்த நிலையில் குறித்த பெண்ணின் குடுபத்தார், உறவினர்கள், பிரதேச பொது மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நாற்பது வட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் காணாமல் போனமை தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்த வேளையிலும் பொலிசாரால் இது தொடர்பில் முறையான துரித விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதையும் தெரிவித்ததுடன், குறித்த சம்பவத்திற்குப் பாரிய கண்டணத்தையும் போராட்டக் காரர்கள் முன்வைத்தனர்.

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பித்த குறித்த போராட்டம் பின்னர் மட்டக்களப்பு கச்சேரி வரை அமைதியான முறையில் பேரணியாக முன்னெடுக்கப்பட்டபோது பொலிஸாரினால் கச்சேரிக்கு செல்ல முடியாதவாறு பஸ்களை இடையில் நிறுத்தியும், கச்சேரி பிரதான வாயிலை மூடியும் தடுத்திருந்தனர். இந்த நிலையில் கச்சேரிக்கு முன்னால் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்து போராட்டக் காரர்களுடன் கலந்துரையாடி அதில் நால்வருடன் நேரடி கலந்துரையாடல் இடம்பெற்று மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதன்போது அரசே குற்றவாளிகளுக்கு உடன் தண்டனை வழங்கு, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், கிணற்றில் வீசிய கயவர்களுக்கு என்னதான் தண்டனை, மனித தன்மையற்ற கொலைகாரர்களைத் தூக்கில் இடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே, வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், வெல்லாவெளி பிரதேச சபைத் தவிசாளர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், அரசியற் பிரமுகர்கள், நாற்பது வட்டை கிராம பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

அன்மைச் செய்தி

Leave a Comment