சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க ;ரவிகரன் எம்.பி

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க; அடக்குமுறைக் கருவியான பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்வதற்கு நடவடிககை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கபடவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் என்னும் சொல்லிசைப்பாடகர் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்.

இந்த நாட்டிலே காலத்திற்கு காலம் இவ்வாறான கலைஞர்களும், படைப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். பல படைப்புக்கள் வெளியீடு செய்யமுடியாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கலைஞனுடைய கைது இடம்பெற்றிருக்கின்றது.

இந்த சொல்லிசைப் பாடகர் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருப்பதானது கருத்துச் சுதந்திரத்தின்மீதான அடக்குமுறையினையே வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறாக இந்தநாட்டில் அடக்குமுறைக் கருவியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் பாவிக்கப்பட்டுவருகின்றது. எனவேதான் இந்த நாட்டிற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் தேவையில்லையென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.

இந்நிலையில் தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள சங்கீத்சன் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருவதுடன், இந்த நாட்டில் அடக்கு முறைக் கருவியாக உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

அன்மைச் செய்தி

Leave a Comment