சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனிதப் புதைகுழியின் என்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக உயர்வு

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் பூர்த்தியடையும் நிலையில் நேற்று வியாழக்கிழமை வரை 499 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு 494 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை குவியல்களாகவும், ஒழுங்கு முறையின்றியும் நேர் சீரின்றியும், உட்கார்ந்த நிலையிலும், கழுத்துடன் துண்டாட்டப்பட்டு, மண்டையோடு பிறிதொரு இடத்திலும் தலையில்லா முண்டமான என்புகூட்டு பிறிதொரு இடத்திலும், மழை அங்கியுடன் சிறுவர் ஒருவரின் என்புக் கூடும் மீட்கப்பட்டுள்ளன.

என்புக் கூடுகள் மாத்திரமன்றி சான்றுப் பொருட்களாக குழந்தைகளுக்கான “பால் போத்தல்”, பாடசாலை புத்தக பை, வளையல்கள், செருப்பு, காலுறைகள், மோதிரம், தாயத்து உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

 

மீட்கப்பட்ட என்பு கூடுகள் மற்றும் சான்றுப் பொருட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் புதன்கிழமை செம்மணி புதைகுழி அகழ்வு பணி நடைபெறும் இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் திறந்த நீதிமன்ற அமர்வினை நடத்தினார்.

 

அதன் போது,செம்மணி புதைகுழி அகழ்வு பணிகள் நடைபெறும் பகுதி தவிர அண்மித்த பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதன் அடிப்படையில், செம்மணி மனித புதைகுழியில் அகழ்வெல்லையை விரிவுபடுத்த வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

அன்மைச் செய்தி

Leave a Comment