இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதம்
கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் மற்றும் கனடியத் தமிழர் தேசிய அவை கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி அதிகாலையில் இந்த நினைவுச்சின்னத்தின் பிரதான மேடை மற்றும் நினைவுப் பலகைகள் வர்ணங்கள் பூசப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் அருவருப்பானது எனக் குறிப்பிட்டுள்ள விஜய் தணிகாச்சலம், இது ஒட்டுமொத்த ஒன்ராறியோ தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீதான நேரடித் தாக்குதல் எனச் சாடியுள்ளார்.
வெறுப்புணர்வும் மற்றும் இனப்படுகொலையை மறுக்கும் போக்கும் ஒன்ராறியோவில் இடம்பிடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்லவென்றும் கடந்த 2025ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் இது திட்டமிட்ட ஒரு சதி என்றும் கனடியத் தமிழர் தேசிய அவை சுட்டிக்காட்டியுள்ளது

