வளப்பற்றாக் குறை வன்னியின் விளையாட்டுத் துறைக்கு பெருஞ்சவால் – ரவிகரன் எம்.பி
வளப்பற்றாக்குறை வன்னியின் விளையாட்டுத்துறைக்கு பெருஞ்சவால் – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; ஊக்கமருந்தின் கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பான அரசிதழிலுள்ள பிழைகளைத் திருத்துமாறும் வலியுறுத்து
வன்னியில் விளையாட்டுத்துறையில் பாரிய வளப்பற்றாக்குறைகள் காணப்படுவதால் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த வளப்பற்றக்குறைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரைக் கோரியுள்ளார்.
அத்தோடு ஊக்கமருந்தின் கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பான இலங்கை அரசின் 2026.01.16 ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிழைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பிழைகளைத் திருத்தம் செய்யுமாறும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் 07.04.2026இன்று இடம்பெற்ற விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதேீநாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம், சமூகப்பாதுகாப்பு உதவுதொகை அறவீடு ஆகியவற்றின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் அங்கீகரிப்பிற்குமான இன்றைய விவாதத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நேர ஒதுக்கீடு காரணமாக,
விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்குவிதிகள் தொடர்பில் சில கருத்துகளை இப்பேரவையில் பதிவு செய்கிறேன்.
இலங்கையில் வாழும் இளையோர் மற்றும் விளையாட்டுகளின் ஒழுக்கவியலை மேலும் செப்பனிடும் வகையில் மேற்படி ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படுகின்றன.
நாட்டின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் எப்போதும் வரவேற்புக்குரியன.
ஆனால் எம்மிடம் எப்போதும் எஞ்சுகிற முதன்மைக்கேள்வி :
தீவளாவிய சமத்துவ நிலை ஏன் கொள்கை முன்வைப்புகளிலும் நடைமுறைகளிலும் கருத்தில் கொள்ளப்படாதுள்ளன – என்பதே!
விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழுள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் தொடர்பான பன்னாட்டு நியமங்களுடன் இலங்கை ஒத்திசைவது வரவேற்புக்குரியது.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் தடைசெய்யப்பட்ட மருந்துகள், தடைசெய்யப்பட்ட முறைகள், போட்டிக்கு உள்ளே தடைசெய்யப்பட்டவை, போட்டியின் போது தடைசெய்யப்பட்டவை, குறிப்பிட்ட சில விளையாட்டுக்களில் தடைசெய்யப்பட்டவை, கண்காணிப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவை என பல்வேறு நிலைகளிலும் ஊக்கமருந்தின் கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பான இலங்கை அரசின் 2026.01.16 ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக குறிப்பிடப்பட்டவை 2026.01.01 தொடக்கம் செயல்நிலைக்கு வருகின்றன. இப்போதே மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.
கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் இலங்கையின் ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மை உலக ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மையால் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் 2025.08.19ஆம் திகதியில் இருந்து உலக தர நியமங்களுக்கு இணங்காதோர் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டிருந்து.
கடைசியில் மேற்படியான சட்டமூல முன்வைப்பு முயற்சிகள் ஊடாக மீண்டும் இலங்கை, பன்னாட்டு நியமங்களுடன் சட்ட அடிப்படையிலும் ஒருங்கிசைகிறது.
விளையாட்டு பயிற்சிகளுக்கான வாய்ப்பு, விளையாட்டுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, போதியளவான பயிற்றுவிப்பாளர்கள் இன்மை, வழிகாட்டல்களில் பற்றாக்குறை, விளையாட்டு வீரர்களின் போசணை மேம்பாட்டுக்கான வழிகாட்டல், தொடர் மருத்துவ காண்காணிப்பு என்பவற்றில் தீவளாவிய சமத்துவம் பேணப்படாமை வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறைக்குப் பெருஞ்சவாலாகிறது.
எந்தெந்த மருந்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன, எந்த அளவில் தடைசெய்யப்பட்டுள்ளன, ஊட்டச்சத்து நிரப்பிகள் அவர்களின் விளையாட்டு வாழ்வில் எவ்வாறு தாக்கஞ்செலுத்தும் என்பவை தொடர்பான தெளிவுநிலை மாகாணங்களுக்கு இடையிலும் மாவட்டங்களுக்கு இடையிலும் சரிசம அளவில் அளவில் தான் நிலவுகின்றது என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் இந்தப்பேரவையில் உறுதியளிக்கமுடியுமா!
விளையாட்டுத் துறையில் இந்த இடத்தில் தான் வன்னி மாவட்டம் சமத்துவநிலையில் அணுகப்படாதுள்ளது.
விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படும் இவ்வேளையில் இப்பேரவை வாயிலாக இவ்வரசிடம் வன்னி மாவட்டத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற உறுப்பினராக நாம் கேட்டுக்கொள்வது இவை தான்.
1. மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக, போதியளவான விழிப்புணர்வை மாவட்டந்தோறும் விளையாட்டு வீரர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்குங்கள்
போதியளவு விழிப்பூட்டல் இன்றி ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும் போது விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படும் நிலை காணப்படலாம்.
2. அனைத்து மாவட்டங்களிலும் கட்டாய ஊக்கமருந்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்படுத்துங்கள்.
3. ஏனைய மாவட்டங்களைப் போன்று முல்லைத்தீவு மாவட்டமும் விளையாட்டுத் துறையில் சமத்துவ அடிப்படையிலான அணுகலைப் பெறும் வகையில், வளங்களை ஒதுக்குங்கள்.
மாவட்டந்தோறும் வழங்கப்படும் மாவட்ட விளையாட்டுக் கட்டடத்தொகுதி முல்லைத்தீவில் இல்லை என்பதை மதிப்பார்ந்த அமைச்சர் அறிவார்.
நீச்சல் தடாகம், கரப்பந்து வலைப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுக்கேற்ற உள்ளக அரங்கு வசதி, விளையாட்டு வீரர்களுக்கான உடல் வலுவூட்டல் பயிற்சி நிலையமும் இல்லை என்பதையும் அமைச்சர் அறிவார்.
இவற்றோடு வழிகாட்டலுக்கான போதிய அளவு ஆளணி வளம், விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றிலும் தீவளாவிய சமத்துவ நிலைக்கு முல்லைத்தீவு மாவட்டத்தையும் கொண்டு வாருங்கள் என இந்தப் பேரவையிலே அரசிடம் மீளவலியுறுத்துகிறேன்.
மேலும் மேற்படி அதிவிசேட வர்த்தமானியில் அதாவது 2471/51அம் இலக்க 2020.01.16ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் நிரம்பியுள்ள பொருள் பிழை, பக்க வடிவமைத்தல் பிழை, எழுத்துப் பிழை, ஊக்கமருந்துகளின் பெயர்களில் உள்ள பிழை, உள்ளடக்க விடுபாடு, பதிவுகள் இரட்டித்தல் என ஆங்கிலத்திலும் தமிழிலும் காணப்படும் வழுக்களைத் திருத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கௌரவ விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்.
ஓர் அரசின் அதிகாரபூர்வ ஆவணத்தில் பிழைகள் இருத்தல் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமே பேரிழுக்கு என்பதால் பிழைகளைத் திருத்துவதில் கூடுதல் கவனமெடுக்குமாறு கௌரவ அமைச்சரை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
நேரவிரயம் கருதி பக்க இலக்கங்களை குறிப்பிடுகிறேன்.
தமிழில்
பக்கம் 2,3,4,5,6,7,8,10,13,14
ஆங்கிலத்தில்
பக்கம் 4, 14
விளக்கமான பிழைகளின் விபரத்தை இந்தப்பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கின்றேன் – என்றார்.

