நாடு திரும்பும் அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் தீர்க்க வேண்டும்
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் நீக்குவதற்கு வடக்கு, கிழக்கில் ‘ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு’ ஒன்றை நிறுவ வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றொன்றை முன்வைத்தே அவர், இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்தியாவிலுள்ள எமது மக்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது சனத்தொகை வீதம் குறைவடைந்து வருகிறது.இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்தால் எமது சனத்தொகை விகிதாசாரம் அதிகரிக்கும், பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும்.இவ்வாறு வரும் பட்சத்தில்,இராணுவத்தின் வசமுள்ள இவர்களின் காணிகளையும் விடுவிக்க முடியும்.இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப விரும்புவது தொடர்பாக, குறிப்பாக பாதுகாப்பு அனுமதி, வீடமைப்பு,காணி மற்றும் சொத்துக்களுக்கான அணுகல், வேலைவாய்ப்பு, இழப்பீடுகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகிய விவகாரங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
குறிப்பாக பல தசாப்தங்களாக இந்தியாவில் வசித்து பின்னர், பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய 75 வயது இலங்கைத் தமிழ் அகதி ஒருவர், கடந்த ஆண்டு மே மாதத்தில் கைதானார். இதைத் தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? கடந்த கால யுத்தத்தின்போது செல்லுபடியாகும் பயண ஆவணங்களின்றி இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைப் பிரஜைகள், சட்டவிரோதமாக இலங்கையை விட்டு வெளியேறியமைக்காக மட்டும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியே மீண்டும் நாடு திரும்ப வேண்டும் இதற்காக அமைச்சரவை அங்கீகரித்துள்ள புதிய நடைமுறை என்ன ? என்பது தொடர்பிலும் அறிய விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் அகதி ஒருவர்,நாடு திரும்புவதற்கு முன்னர், குடியுரிமை உறுதிப்படுத்தல் பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு அனுமதி உள்ளிட்ட என்னென்ன நடைமுறைப் படிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்? 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இலங்கை அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இதில் ஐ.நா. அகதிகள் முகவர் நிலையத்தின் உதவியுடன் திரும்பியவர்கள் மற்றும் சுயாதீனமாகத் திரும்பியவர்கள் எத்தனை பேர்? புதிய நடைமுறையின் கீழ் பாதுகாப்பு அனுமதிப் பரிசீலனை செயன்முறை எவ்வாறு அமையும்? என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்ன தகவல்கள் அல்லது ஆவணங்கள் தேவைப்படுகின்றன ?இந்த மதிப்பீடு நிறைவு செய்யப்பட வேண்டிய அதிகபட்ச கால அவகாசம் என்ன?பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டால் என்ன நிகழும்? ஒருவருக்கு எதிரான (எதிர்மறையான) தீர்மானத்திற்கு காரணங்கள் வழங்கப்பட வேண்டுமா மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு அதை எதிர்த்து மறுபரிசீலனை செய்யவோ அல்லது மேல்முறையீடு செய்யவோ உரிமை உள்ளதா? தன்னிச்சையான அல்லது காலவரையறையற்ற பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு எதிராக என்ன பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன?

