தாயகச் செய்தி புலச் செய்திகள் 

சுவிற்சர்லாந்து – யாழ்ப்பாணத்தில் “70 ஆண்டுகள் 70 முகங்கள்»சிறப்புக் கண்காட்சியும் நிகழ்வுகளும்

சுவிற்சர்லாந்து – யாழ்ப்பாணத்தில் “70 ஆண்டுகள் 70 முகங்கள்»சிறப்புக் கண்காட்சியும் நிகழ்வுகளும்

சுவிற்சர்லாந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான 70 ஆண்டுகால தூதரக உறவுகளைக் குறிக்கும் வகையில், இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் வள்ளுவர் மண்டபம்” 03. 10. 2025 மற்றும் 04. 10. 2025 ஆகிய திகதிகளில் இரண்டு நாள் சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையிலான தொலை அளவீடுகளை உட்பொருளாக நினைவுகூரும் வகையில் அமைந்தது.
.
.
70 ஆண்டுகால சுவிற்சர்லாந்து இலங்கை நட்புப் பயணம்
25 ஆண்டுகால அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான பங்களிப்பு
20 ஆண்டுகால சுவிஸ் வளர்ச்சி ஒத்துழைப்பின் (SDC) செயற்பாடுகள்

பகராளிகள் (பிரதிநிதிகள்) பங்கேற்பு

இரு நாட்டு அரசுப் பேராளர்கள், சமூகப் பெரியோர்கள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் மாந்தர் (மனித) உரிமைகள் துறைகளில் சுவிற்சர்லாந்தின் பங்களிப்புகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஆவணப்படம் திரையிடல்

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுவிற்சர்லாந்து மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகள், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான ஆவணப்படம் அக்டோபர் 3 (சனிக்கிழமை) அன்று திரையிடப்பட்டது.
“பயணம்” எனும் தலைப்பில், இத்தனை ஆண்டுகளாகச் சுவிற்சர்லாந்து தூதரகம் ஆற்றிய பணிகளை உள்ளடக்கி இவ்வாவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இலங்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களின் பெறுபேறுகளும் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இப்பொதுப் பணிகள் ஊடாக ஏற்படுத்தப்பட்ட தனிமனித, சமூக மற்றும் தேசிய ரீதியான மாற்றங்களும் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செயற்பாடுகளைச் சுவிற்சர்லாந்து தூதரகம் முன்னின்று ஆற்றியிருந்தாலும், இதில் பலரது பங்களிப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்களின் பங்களிப்புகள் இல்லாமல் இப்பணிகளை முன்னெடுத்திருக்க முடியாது. ஆகவே இப்பணிகளில் இதுவரை பங்காற்றிய தனிநபர்கள், பொது அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கும் உரிய மதிப்பளிக்கப்பட்டுள்ளது.கருத்தரங்குகள்
பொருளாதார வளர்ச்சி, புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு மற்றும் தேசிய ஒற்றுமை ஆகிய தலைப்புகளில் வல்லுநர்கள் பங்கேற்ற சிறப்புரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்றன.

மதிப்பளிப்பு (கௌரவிப்பு): இந்த வரலாற்றுப் பயணத்தில் முக்கிய பங்காற்றிய தகையோர் மதிப்பளிக்கப்பட்டனர். கடந்தகால அடைவுத்திறன் (சாதனைகளை) மீளத் திரும்பிப் பார்ப்பதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை உசாவும் (ஆராயும்) களமாக இந்நிகழ்வு அமைந்தது.
நிகழ்வின்போது திரு. மார்த்தின் ஸ்ரூடெர் அவர்கள் சுவிற்சர்லாந்தின் மேம்பாடு (அபிவிருத்தி) மற்றும் ஒத்துழைப்புக்கான பணியகமான (DEZA) அமைப்பில், நெருக்கடி மற்றும் மறுசீரமைப்புப் பகுதிகளில் திட்டத் தலைவராகப் பணியாற்றினார். அவரது சிறப்பான பணிக்காக அவர் மதிப்பளிக்கப்பட்டார்.
திருநிறை. சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் அவர்கள் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிற்சர்லாந்துத் தூதரகத்தில் மூத்த தேசிய திட்ட அலுவலராகப் (Sneior National Programme Ofifcer) பணியாற்றி வருகிறார். இவர் வரவேற்பு உரையினை ஆற்றினார்.

70 முகங்கள்* கண்காட்சியும் சைவநெறிக்கூடத்தின் பங்களிப்பும்

முன்னர் கொழும்பில் நடத்தப்பட்டு தற்போது யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்படும் 70 ஆண்டுகள் 70 முகங்கள் ஒளிப்படக் கண்காட்சி இரு நாட்டு உறவின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. இதில் சமூகம், பண்பாடு, கல்வி, மாந்தர்நேயம் மற்றும் பொதுநலன் சார்ந்த துறைகளில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளின் முகங்களும் அவர்களின் பணிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்: இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பல தமிழ் முகங்களில் சுவிற்சர்லாந்தில் தமிழ்ச் சமூகத்தின் சமய பண்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களும் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளார். சைவநெறிக்கூடத்தின் வரலாறு & பணிகள்
1994-இல் சுவிற்சர்லாந்தில் நிறுவப்பட்ட சைவநெறிக்கூடம், இனம், மொழி, சமயம், பண்பாடு மற்றும் வரலாறு எனும் ஐந்து துறைகளில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை முன்னெடுக்கும் பக்தி மன்றமாகச் செயற்பட்டு வருகிறது.
தற்போது பேர்ன் மாநிலத்தை மையமாகக் கொண்டு, சுவிஸ் வலே மர்தினி), இங்கிலாந்து (கைவீக்கம்), இலங்கை (யாழ்ப்பாணம் இணுவில், அம்பாறை பளவெளி-வளத்தாப்பிட்டி, மற்றும் 12.07.2026 முதல் லிந்துல நுவரெலியா) ஆகிய இடங்களில் கருவறையில் தமிழ் ஒலிக்கும் திருக்கோவில்களை அறங்காவல் செய்து வருகிறது.

சுவிற்சர்லாந்து அரசு அளித்துள்ள இந்த அங்கீகாரத்தைத் தனிப்பட்ட மதிப்பாக மட்டும் கருதாமல், தமிழ் மொழி, சமூகம், தாயகம் மற்றும் மாந்தர் நலன்களுக்குப் பயனுள்ளதாக மாற்றுவதே சைவநெறிக்கூடத்தின் அணுகுமுறையாகும். சுவிற்சர்லாந்தில் தமிழர்கள் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். வாழும் சமூகத்தோடு இணைந்து செயலாற்றுவதோடு, தாயக் மக்களின் நலன்களுக்காக நடைமுறைச் செயற்பாடுகளை முன்னெடுப்பது புலம்பெயர் சமூகத்தின் பொறுப்பாகும்.

பன்னாட்டு சட்டம் மற்றும் மனித உரிமை விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சுவிஸ் வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி, புலம்பெயர் தமிழர்கள் 40 ஆண்டுகள் குழுமத்தின் சார்பில் தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை சைவநெறிக்கூடம் 03.03.2026 அன்று சுவிற்சர்லாந்து மத்திய அரசுத் தலைமைச் செயலகத்தில் கையளித்தது.
முறைமமையும் (நீதியும்) பொறுப்புக்கூறலும் : போரினால் ஏற்பட்ட துயரங்கள் தொடரும் சூழலில், தமிழ்மக்களுக்கு நீதியும், பொறுப்புக்கூறலும், மனித உரிமைகளுக்கான மதிப்பும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை இம்மனு வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணக் கண்காட்சியின் முக்கியத்துவம்

கொழும்பைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இக்கண்காட்சி நடைபெறுவது, சுவிஸ்-இலங்கை உறவின் வரலாற்றையும், சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களின் சமூக, சமய, பண்பாட்டுப் பங்களிப்புகளையும் வட பகுதி மக்களுக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது. இக்கண்காட்சி கடந்தகால நினைவுகளோடு நின்றுவிடாமல், இலங்கையில் நீதி, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விழுமியங்களை வலுப்படுத்துவதற்கான எதிர்காலப் பாதையை உருவாக்க வேண்டும் எனக் கூறி, சைவநெறிக்கூடம் இக்கண்காட்சிக்குத் தனது வாழ்த்துகளையும் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் பணிகளுக்கு தனது வலிமைத் துணையினையும் (ஆதரவையும்) தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் சைவநெறிக்கூடத்தின் பகராளிகளக யாழ். இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. தனியொளிச்சிவம் செல்லத்துரை பிரசாத், பேர்ன் சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடம் இளையோர் மன்ற இணைப்பாளர், சட்டவாளர் திருநிறை. லாவன்யா சின்னத்துரை, திருநிறை. தெய்வநாயகம் ராஜ்குமார், திருநிறை. தவக்குமார் டிலக்சன், பேர்ன் சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடம் சமூகச்செயற்பாட்டாளர், ஆசிரியர் திருமதி. நந்தினி முருகவேள், அம்பாறை சைவநெறிக்கூடம் இணைப்பாளர் திருநிறை. ஜெயச்சந்திரன் வெள்ளி, இலங்கை நுவரேலியா லிந்துல இராசராசேச்சுரம் திருக்கோவில் திருநிறை. ஈஸ்வரன் சுப்பையா, திருமதி சுமித்திரா பிரசாத், செல்வி சங்கவி பிரசாத், திருநிறை. சின்னத்துரை ஸ்ரீராம், திருநிறை சின்னத்துரை இலக்ஸ்மணன், திருநிறை. சிவகரன் (ஊடகவியலாளர்), திருநிறை. இராமமூர்த்தி ஹபினேஸ்வரன், திருநிறை. கமலநாதன் பவிசன், திரு. பூபாலப்பிள்ளை ரமேஸ், பளவெளி – வளத்தாப்பிட்டி அம்பாறை, சைவநெறிக்கூடம் அருள்மிகு ஆதிசிவன் திருக்கோவில் செயலர் திருநிறை. இராசரத்தினம் தவசீலன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment