எரிபொருளுக்கான 50 ரூபா வரியை நீக்குமாறு விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்க முடியும் என, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது;
”பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், 50 ரூபா வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள கிவ்.ஆர். (QR) முறையும், எரிபொருள் விநியோகத்திற்கான வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ”எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான சேவை வழங்கியமைக்கான சேவை கண்டனம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் விநியோகத் துறையில் உள்ள சினொபெக், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) போன்ற நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித கவனம் செலுத்த வேண்டும் எனவும் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

