இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு ஒழிப்புக்கு இந்தியா வழங்கிய மலத்தியன் அமைச்சரிடம் ஒப்படைப்பு

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா 500 லீற்றர் மலத்தியன் பூச்சிகொல்லியை வழங்கியுள்ளது.சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இந்த நன்கொடை, இலங்கையின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப ஆதரவாக அமைவதோடு, பொது சுகாதாரத் துறையில் இலங்கை மற்றும் இந்தியா இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் தற்போது பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்திைய உருவாக்கியிருப்பது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மாற்று பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்பத் தரமுடைய மலத்தியன், அதிக ஆபத்து நிலவும் பகுதிகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் மூடுபனி தெளிப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக வளர்ந்த டெங்கு நுளம்புகளின் அடர்த்தியை விரைவாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.மலத்தியன் என்பது உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுக்கு அமைவாக பல தசாப்தங்களாக நோய் பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஆர்கனோபாஸ்பேட் (Organophosphate) வகையைச் சேர்ந்த பூச்சிக்கொல்லியாகும்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ; இந்த நன்கொடை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும். வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களுடன் மலத்தியனையும் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்தியிருந்தனர்.இதனால்தான், இந்தியாவிடமிருந்து இதனைப் பெற்றுக்கொண்டோம். இயற்கை அனர்த்தங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பிற அவசர சூழ்நிலைகளில் இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாகவும் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவு இந்த நன்கொடையினூடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை மக்களின் சார்பில் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

அன்மைச் செய்தி

Leave a Comment