முல்லை, மன்னார் வைத்திய சாலைகளுக்கு CT, MRI ஸ்கேனர் இயந்திரங்கள். நளிந்த ஜயதிஸ்ஸ
வடக்கில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளுக்கு சி.ரி, எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ரவிகரன் எம்.பி தமது கேள்வியின் போது;
மன்னார் வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கேனர் வசதிகள் ஏற்படுத்தப்படுமென ஏற்கனவே சுகாதார அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் சி,ரி ஸ்கேனர் வசதி இல்லாமல் நீண்டகாலமாக முல்லைத்தீவு மாவட்ட நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பல நூற்றுக் கணக்கான நோயாளர்கள் சி.ரி ஸ்கேன் எடுப்பதற்காக வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வரவேண்டிய நிலையே காணப்படுகிறது.அந்த வகையில் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளுக்கும் சி.ரி ஸ்கேனர் வசதிகளை வழங்க வேண்டுமென, பாதிக்கப்படுகின்ற மக்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். இதற்கு தொடர்ந்தும் பதிலளித்த சுகாதார அமைச்சர்,மன்னார் வைத்தியசாலைக்கான சி.ரி ஸ்கேனர் இயந்திரத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முல்லைத்தீவில் புதிய மருத்துவ விடுதி வளாகக் கட்டுமானப் பணிகளை இந்த வருடம் நவம்பர் மாதமளவில் ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.

