இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊழல் தடுப்புச் சட்டத்தில் முன்வைக்கப் பட்டுள்ள புதிய திருத்தங்கள்

ஊழல் தடுப்புச் சட்டத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய திருத்தங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.ஊழல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கும், பிணை வழங்கும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதற்கும் இத்திருத்தங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊழல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் அல்லது அவற்றை மாற்றியமைத்ததாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு, குறித்த சொத்தின் பெறுமதியை விடக் குறையாத மூன்று மடங்கு தொகை மேலதிக அபராதமாக விதிக்கப்படும்.இதற்கு முன்னர், ஊழல் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகளுக்கு குறையாத கடூழியச் சிறைத்தண்டனையும், ரூ.10 இலட்சம் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டது. புதிய திருத்தத்தின்படி, ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள முழுமையான நிதி இழப்பிற்குச் சமமான தொகையையும் மேலதிக அபராதமாக அறவிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பிணை வழங்கும் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ரூ.1 இலட்சத்திற்குக் குறையாத இலஞ்சத்தைப் பெறுதல், வழங்குதல் அல்லது கோருதல் மற்றும் ரூ.5 இலட்சத்திற்குக் குறையாத அரச நிதி இழப்பை ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு, விசேட சூழ்நிலைகளில் மட்டுமே உயர்நீதிமன்றத்தால் பிணை வழங்க முடியும் என திருத்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான வழக்குகளில் பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு இல்லாதாக்கப்படுகிறது. சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும் போது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.வெளியிடப்பட்ட சொத்து அறிவிப்பை சட்டப்படி அதிகாரம் பெற்ற அதிகாரி அல்லது நிறுவனத்திடம் சமர்ப்பிப்பதைத் தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவது குற்றமாகக் கருதப்படும். இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூ.10 இலட்சம் அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.புதிய திருத்தங்களின் மற்றொரு முக்கிய அம்சமாக அரசின் பங்குச் சொத்தின் வரம்பு மாற்றப்பட்டுள்ளது.முன்னதாக, 25 சதவீத பங்குகளை வைத்திருந்த நிறுவனங்களும் இச்சட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களின் கீழ்,வந்தன. புதிய திருத்தத்தின்படி, அந்த வரம்பு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment