கந்தளாய்: பாறைக்குன்றில் கைக்குண்டு மீட்பு!
கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள கழ்மலை பன்சலைக்கு அருகாமையிலுள்ள பாறைக்குன்றுப் பகுதியில், காலனித்துவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது எனச் சந்தேகிக்கப்படும் கைக்குண்டு ஒன்றை கந்தளாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த கைக்குண்டைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கைக்குண்டை விசேட அதிரடிப்படையினரின் (STF) வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்கு, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைக்குண்டு மீட்கப்பட்ட பாறைக்குன்றுப் பகுதியில் காலனித்துவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பழமையான கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன், கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் அக்காலத்தில் சிறிய அளவிலான விமானத் தரையிறங்கும் தளம் ஒன்று இயங்கி வந்ததாகவும் உள்ளூர் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு எந்த வகையைச் சேர்ந்தது, அதன் தற்போதைய செயல்பாட்டுத் திறன் என்ன மற்றும் அது உண்மையிலேயே காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததுதானா என்பன போன்ற விவரங்கள், விசேட நிபுணர்களின் தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பின்னரே முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

