இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சாட்சியங்களின்றி தனிநபர் தாக்குதல் களை மட்டுமே எதிர்க்கட்சி முன்னெடுக்கிறது பிரதமர்

சட்டத்தின் ஆதிக்கத்தினை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதையே நாம் செய்துவருகின்றோம்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மக்கள் ஆணைக்கு அமைவாகச் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான,நேற்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதனையும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர் என்றும், அவர்களின் வாதங்கள் பெரும்பாலும் வாய்ப்பேச்சு மற்றும் தனிநபர் தாக்குதல்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்றும் வலியுறுத்தினார்.அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் எதிர்கொள்ள நேரிட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது, அதேபோன்று எந்தவொரு வகையிலும் அதனை நியாயப்படுத்தவும் இயலாது.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மட்டுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், சம்பவத்திற்கு முன்னரும், சம்பவத்தின்போதும், அதற்குப் பின்னரும் அவரது நடத்தை மக்கள் நம்பிக்கையை மீறும் வகையில் அமைந்திருந்தது என்றும் எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளைத் தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

சபையில் எழுப்பப்படும் கூச்சலினாலோ, தனிப்பட்டத் தாக்குதல்களினாலோ, குரோதத்தனமான வாசகங்களினாலோ உண்மை உறுதிப்படுத்தப்படப்போவதில்லை.

இன்றும் இங்கு எமக்குக் கேட்க நேரிட்டிருப்பது உண்மையைத் திரிபுபடுத்துதல், தகவல்களைத் தவறாக முன்மொழிதல், அரைகுறை உண்மைகள் மற்றும் அமைச்சரவை அமைச்சரொருவர் மீது வஞ்சகத் தாக்குதலைத் தொடுத்தல் ஆகியவற்றை மாத்திரமே ஆகும். இத்தகைய விடயங்களால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் நோக்கம் உறுதிப்படுத்தப்படப்போவதில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னிருந்தே சிறைச்சாலை முறைமையில் நிலவிவந்த கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்தன என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டிலிருந்து சிறைச்சாலைத் திணைக்களத்தில் வெற்றிடங்கள் இருந்துவந்த போதிலும், தற்போதைய அரசாங்கமே அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அன்மைச் செய்தி

Leave a Comment