முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட ங்கள்; சுற்றுலா அமைச்சின் விசேட தலையீடு ரவிகரன்
சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள்; சுற்றுலா அமைச்சின் விசேட தலையீடு தேவை என – ரவிகரன் எம்.பி வலியுறுத்து
சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு சுற்றுலா அமைச்சு விசேட தலையீட்டை மேற்கொள்ளவேண்டுமென சுற்றுலா பிரதி அமைச்சரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்த சுற்றுலா பிரதிஅமைச்சர் ருவன் ரணசிங்க, முல்லைத்தீவு மாவட்டத்தில் 76சுற்றுலா மையங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அதில் 10சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் 23.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை சுற்றுலா அதிகார சபையால் 2025 மே மாதத்தில் வெளியிடப்பட்ட இலங்கைக்கான உள்வரும் பயணம் தொடர்பான அறிக்கையில்,
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் மிகவும் குறைவான உள்வரும் பார்வையாளர்களைக் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு குறிப்பிடப்படுகிறது. 25 மாவட்டங்களில் கடைசி நான்கு மாவட்டங்களும் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும் தான். முல்லைத்தீவு சூழலியல் சுற்றுலாக்கும் வரலாற்றியல் தேடல்களுக்கும் மிகவும் ஏற்ற இடம் எனக்குறிப்பிடும் அவ்வறிக்கை மட்டுப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அணுகல் தொலைவு என்பவற்றால் கவனிக்கப்படாதிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
மாவட்ட அடிப்படையிலான தங்குமிடங்களின் வரிசையிலும் 25 மாவட்டங்களில் முல்லைத்தீவு 25ஆவது இடத்தில் உள்ளது. வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும் கடைசி நான்கு இடங்களில் உள்ளன.
சுற்றுலா சார்பான முதலீடுகளிலும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் ஒரு செயற்றிட்டம் கூட 2025 இல் உள்ளீர்க்கப்படவில்லை.
இவ்வாறான புள்ளிவிபரங்கள், சுற்றுலாத்துறையில் மிகவும் கடைசி நிலையில் உள்ள மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் காணப்படுவதை சான்று படுத்துகின்றன.
சமத்துவ அடிப்படையில் 4% பங்குபற்றலை ஒரு மாவட்டம் கொண்டிருக்கவேண்டிய நிலையில் கொழும்பு, காலி தலா 20 சதவீதத்தையும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் தலா 0.08 சதவீதத்தைக் கொண்டிருப்பது, தீவின் மிகப்பெரும் சமத்துவ இடைவெளியை சான்றுப்படுத்துகிறது.
இவ்வாறான நிலையில், சுற்றுலா சார்பான அனைத்து புள்ளிவிபரங்களிலும் மிகவும் பின்னடைவான நிலையிலுள்ள இவ்விரு மாவட்டங்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு தங்கள் அமைச்சு விசேட தலையீட்டை கடந்த காலத்தில் மேற்கொண்டுள்ளதா அல்லது இனிவரும் காலத்தில் மேற்கொள்ளுமா என கேட்கின்றேன் – என்றார்.
இந்நிலையில் சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க இதன்போது பதிலளிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை ஏற்றுக்கொள்கின்றேன்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சாரந்தவிடயங்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவேண்டும்.
எமது அரசாங்கத்திற்கு கொள்கையொன்று இருக்கின்றது. அந்தக் கொள்கை அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்திலுள்ள சுற்றுலாத்துறை இலக்குகளை அரசாங்கமானது இனங்கண்டுள்ளது.
2026மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வவுனியா பல்கலைக்கழகத்தினால் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 76சுற்றுலா மையங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் 10சுற்றுலா மையங்களை தெரிவுசெய்து அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள சுற்றுலா மையங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படும்.
நாங்கள் உலகவங்கி மற்று ஆசிய அபிவிருத்துவங்கி என்பவற்றுடன் இணைந்து இதற்காகப் பணியாற்றுகின்றோம். இதற்கெனப் பல்வேறு கருத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
இவ்வாறாக உட்கட்டமைப்புவசதிகளை மேற்கொண்டு, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.
அனைத்து அமைச்சுக்களுடனும் இணைந்து நாம் அதற்கான பணிகளை முன்னெடுப்போம் எனப் பதிலளித்தார்.

