தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பு,

அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் சுதீபன் போல் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான சரியான தகவல்கள் தரவுகள் இதுவரை இல்லை நாம் வேலை வாய்ப்புக்களை கோரும் போது தரவுகள் கையசம் இருந்தாலே, வேலை வாய்ப்பை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

செப்டெம்பர் மாதமளவில் அபிவிருத்தி உத்தி யோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது போட்டி பரீட்சை இன்றி நடைபெறவுள்ளதாகவும் அறிகிறோம், எனவே பட்டதாரிகள் பட்டப்படிப்பினை முடித்து வெளியேறிய ஆண்டு, அவர்களின் துறை சார்ந்த தரவுகள் கையசம் இருந்தாலே வேலை வாய்ப்பினை சிக்கல் இன்றி பெற்றுக்கொள்ள முடியும்.

தனியார் துறையிலும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. சரியான தரவுகள் இல்லாததால், சரியானவர்களை இனம் கண்டு அங்கு வேலைவாய்ப்பினை அவர்களுக்கு பெற்றுகொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

அத்துடன் எதிர்காலத்தில் வடமாகாண அபிவிருத்தி வேலை திட்டங்கள் கூடாக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. பட்டதாரிகள் தொடர்பான தரவுகள் இருந்தாலே அவர்கள் சரியான துறைக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்

எனவே வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்கிற்கு நேரில் வந்து தமது பட்டப்படிப்பு தொடர்பான விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை, வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலும், நாம் வேலை கேட்டு போராட்டங்கள் நடத்தும் போது, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு கருத்துக்களை முன் வைப்போர், அன்றைய தினம் தந்தை செல்வா கலையரங்கிற்கு வருகை தந்து எம்முடன் திறந்த கலந்துரையாடலில் ஈடுபடுங்கள்.

சிலரின் கருத்துக்கள் வேலையற்று இருக்கும் எமக்கு மிகுந்து மனவேதனைகளை தந்திருந்தது.

எனவே சமூக ஊடகங்களின் கருத்துக்களை முன் வைப்போர், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள், என அனைத்து தரப்பினரையும் திறந்த கலந்துரையாடலுக்கு அழைக்கின்றோம்.

எமது வேலையற்ற பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வுகாண்பது, எதிர்காலத்திலும் இந்த பிரச்சனை தொடராது இருக்க என்ன செய்யவேண்டும். எமது கல்வியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்ன ? எமது பிரதேச வளங்களை நாம் எவ்வாறு ஆக்க பூர்வமாக பயன்படுத்தி எமது பகுதியை அபிவிருத்தி செய்வது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான திறந்த கலந்துரையாடலை நாம் மேற்கொள்வோம்

குறிப்பாக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் இனிப்பை மெய்க்கும் எறும்புகள் போல, மாத்திரம் பிரச்சனைகளை தேடி ஓடாது எந்த காலத்திலும் போராட்ட களங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனையை தீர்க்க முயலவேண்டும்.

எமது திறந்த கலந்துரையாடலுக்கு எந்த பேதமுமின்றி அனைத்து தரப்பினையும் அழைக்கின்றோம் என தெரிவித்தார்.

அன்மைச் செய்தி

Leave a Comment