2026 GCE O/L விண்ணப்பம் ஒன்லைனில் கோரப்பட்டுள்ளது!
இவ்வருடம் (2026) நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2026 GCE O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் இருவரும் நேற்று (03) முதல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனைத்தும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்:பாடசாலை விண்ணப்பதாரிகள்:
தத்தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஏற்கனவே அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகள்:
தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், தமது பாதுகாவலரின் (தாய் அல்லது தந்தை) அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பதிவு செய்துகொள்ள முடியும்.
முடிவுத் திகதி:
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவு 12:00 மணி ஆகும். அதன் பின்னர் எக்காரணத்திற்காகவும் காலநீடிப்பு வழங்கப்படமாட்டாது என்பதால், மாணவர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், அதன் அச்சுப் பிரதியொன்றைத் தங்களின் பாதுகாப்பான தேவைக்காக வைத்திருக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0112784208, 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமோ, gceolexamsl@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவோ மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

