சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அர்ச்சுனாவின் உரைக்கு எதிராக விரிவுரையாளர் இளம்பிறையன் எச்சரிக்கை

அரசியற் செயற்பாடுகளை வெளியில் வைத்துக்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்கள் மதுபானத்துக்காகவும், கொத்து ரொட்டிக்காகவுமே போராட்டங்களில் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து குறித்து,வினவிய போதே,விரிவுரையாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்றவர். ஆகவே மாணவர்கள் அவ்வாறு செய்வார்களா என அர்ச்சுனா யோசிக்க வேண்டும். தமது தேவைகளுக்காக இவ்வாறு சொல்லக் கூடாது. நான் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, இங்கேயே நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றுகிறேன். எமது மாணவர்கள் இவ்வாறெல்லாம் செய்பவர்கள் அல்ல. எமது மக்கள் பிரதிநிதிகளே எமது பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துடன் செய்யக் கூடாது. அதனை வெளியே செய்யுங்கள்.

பல்கலைக்கழக மாணவர் சக்தி என்பது ஒரு பயங்கரமான சக்தி. இங்கு 14600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அதில் கிட்டத்தட்ட 09 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மாணவர்கள். இந்த சக்தியுடன் மோதுவதை விட்டுவிடுங்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் உண்மையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கின்றனர்.மக்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்களின் சக்தியை பயன்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார்.

அன்மைச் செய்தி

Leave a Comment