அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலவச சுகாதார சேவையை தனியார் மயமாக்க சதி: 2500 மருத்துவர் களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தற்போது சுமார் 2000 முதல் 2500 வரையான மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும், ஏறத்தாழ 1000 நிபுணத்துவ மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த இக்கட்டான நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாத அராசங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நாட்டின் சுகாதாரத் துறையைத் தனியார் மயமாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட சதியை முன்னெடுத்து வருவதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயிற்சியை முடித்த மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவது தொடர்பாகச் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கையானது ஒட்டுமொத்தத் தொழில்முறை வல்லுநர்களாலும் அருவருக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.  மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தாமல், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் அமைச்சர் முயற்சிக்கிறார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முதலில் தனது சொந்த மாவட்டமான களுத்துறையில் உள்ள சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். களுத்துறை மாவட்டத்தின் முக்கிய மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன.

அவற்றில் சில வைத்தியசாலைகள் மூடப்பட்டும் கிடக்கின்றன. தனது சொந்த மாவட்டத்தின் அடிப்படைச் சுகாதார வசதிகளைக்கூட மேம்படுத்த முடியாத ஒருவர், அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களை ஒடுக்கப் பார்ப்பது அவரது நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

நாட்டில் தற்போது சுமார் 2000 முதல் 2500 மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும், ஏறத்தாழ 1000 நிபுணத்துவ மருத்துவர்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, மக்களுக்கான தேசிய சுகாதாரக் கொள்கை, மனிதவள முகாமைத்துவத்துக்கான ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றக் கொள்கைகள், மருந்து மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான கொள்கை போன்ற எதையுமே உருவாக்கச் சுகாதார அமைச்சு தவறிவிட்டது.

தங்களுக்கு மிக அருகில் இருக்கும் தேசிய வைத்தியசாலைக்கு ஒரு நிரந்தர பிரதிப் பணிப்பாளரைக்கூட நியமிக்க முடியாத அளவுக்குச் சுகாதார அமைச்சு நிர்வாகக் குளறுபடிகளால் நிறைந்துள்ளது. அமைச்சரின் இத்தகைய நடவடிக்கைகள் இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நாட்டின் சுகாதாரத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட சதியின் ஆரம்பப் புள்ளியாகும்.

கிராமப்புற வைத்தியசாலைகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் மருந்துகள் குறைக்கப்பட்டு, அவை படிப்படியாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதன் மூலம் அரசாங்கமானது சுகாதார சேவைகளை ஒடுக்கி, மக்கள் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தனியார் சுகாதாரச் சேவையை ஊக்குவிக்க முயற்சிக்கிறது.என்றார்.

அன்மைச் செய்தி

Leave a Comment