எரிபொருள் நெருக்கடிக்கு அரசே பொறுப்பு – ரவிகரன் எம்.பி
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு அரசே பொறுப்பு – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு; புதன் சிக்கன விடுமுறை தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்
அரசு எரிபொருளுக்கான சடுதியானகேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தவறியதன்மூலம் நிகழ்ந்த எரிபொருள் பதுக்கல்களாலேயே, தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்று உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த நெருக்கடி நிலைக்கு அரசே பொறுப்பெனவுத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒரு வாரத்திற்குரிய 20சதவீத மனித உழைப்பினை இழந்து, வெறுமனே 02சதவீத எரிஎண்ணெயை மிச்சப்படுத்தும்வகையில் அமைந்துள்ள புதன் சிக்கன விடுமுறை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் 20.03.2026இன்று இடம்பெற்ற உலகில் தற்போது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
உலகில் தற்போது நிலவும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதத்திலே உலகின் சமகாலச் சூழல், தீவின் சமநிலையில் ஏற்படுத்துகின்ற தாக்கம் தொடர்பில் வாதிடுவதற்கு இன்றும் கூடியிருக்கிறோம்.
உலகமெங்கும் நெருக்கடிநிலை நிலவும் சமகாலத்தில் எம்முன்னுள்ள முதற்கேள்வி இதுதான்!
இவ் அரசாங்கம், இந் நெருக்கடிநிலையை நிலைகுலையாது கையாள்கிறதா?
இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
உலகளாவிய பொது நெருக்கடி நிலைக்கு, கொள்கை நிலையிலான திடமான முடிவை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கின்ற போது நிகழ்வுகளுக்கான எதிர்வினையை மட்டுமே தான் அடுக்கடுக்காக ஆற்றுகின்றதோ என்றே என கேட்கத்தோன்றுகிறது!
முடிவெடுப்பதில் அடிக்கடி ஏற்படும் இத்தகையை மாற்றங்கள், ஒரு முறையான நீண்டகாலத் திட்டம் அரசிடம் இல்லையோ என எண்ணத்தோன்றுகிறது.
பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து கட்டமைக்கப்பட்ட தீர்வுகளை தயாரிப்பதற்கு பதிலாக, அரசாங்கம் ஒரு தற்காலிக நடவடிக்கையிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டிருப்பதாகவே எமக்கு புலப்படுகிறது.
எரிபொருளுக்கான நெடுவரிசைகளும் பதுக்கல்களும் கடந்த மாதத்தின் கடைசி நாளிலேயே தொடங்கிவிட்டது.
இரண்டு கிழமைகள் கடந்தே ஞசு முறைமை கொண்டுவரப்படுகிறது.
ஒன்றரை மாதத்திற்குரிய எரிபொருள் முதல் 10 நாள்களுக்குள் தீர்ந்துவிட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.
இப்படியான சடுதியான கேள்வி அதிகரிப்பை கட்டுப்படுத்த தவறியது யார்! இப்போது நிகழ்ந்த பதுக்கல்களுக்கு பொறுப்பேற்பது யார்! ஓர் அரசாக, நீங்கள் தானே!
உலகளாவிய நிகழ்தகவுகளை முன்கூட்டியே கணித்து, ஏற்படவல்ல தாக்கங்களை முன்கூட்டியே கருதி, பல படிகளில் சோதித்து, முறைப்படி நடைமுறைப்படுத்துவதையே ஓர் அரசாக நீங்கள் செய்திருக்கவேண்டியது!
நடைமுறையிலுள்ள ஞசு முறைமையை காலத்துக்கேற்ப இற்றைப்படுத்தாமையே சமகால வாரத்தின் சறுக்கல்களாகின்றன.
ஒவ்வொரு பிரச்சினை வருகின்ற போதும் அதற்குரிய தீர்வைக் கண்டு முறைமையை இற்றைப்படுத்துவதென்பது வெள்ளம் வர வர தற்காலிக அடைப்புகளை இடுவதுக்கு ஒப்பாகிறது.
வெள்ளம் வருமுன்பாகவே அணை கட்டுவதே ஓர் அரசுக்கு அணி.
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
ஒரு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் மீண்டும் மாற்றியமைக்கப்படுவது என்பது திட்டமிடல், சோதனை செய்தல், மற்றும் களநிலையை புரிந்துகொள்வதில் ஏற்படும் தோல்வியையே பிரதிபலிக்கிறது.
பொதுநெருக்கடி நிலையை எதிர்கொள்ள தற்பொழுது அரசாங்கம் முன்வைத்துள்ள புதன்கிழமை சிக்கன விடுமுறை தாங்கள் எதிர்பார்த்த அளவிலான பெறுபேற்றைத் தந்துள்ளதா!
கிட்டத்தட்ட 20% மனித மூலதனத்தை குறித்த நாளில் இழந்து நாம் சேமித்தது என்ன! கடந்த செவ்வாய்க்கிழமையோடு ஒப்பிடுகையில் புதன் கிழமையில்,
மொத்த மின்சக்தி – 1.17 ஜிகாவாட் மணிக்கு குறைந்துள்ளது. அதாவது 2%குறைவு.
பகல்நேர உச்ச தேவை – 113.6 மெகா வாட் (3.9%குறைவு)
எரியெண்ணெய் பயன்பாடு – 0.32ஜிகாவாட் மணிக்கு குறைந்துள்ளது. அதாவது 2.1%
ஒரு கிழமைக்குரிய 20% மனித உழைப்பை ஒரு நாளில் இழந்து 2% அளவான எரியெண்ணெயை (தேமல் ஒயில்) மிச்சப்படுத்துவது இலாபகரமானதா!
திட்டமிட்டதற்குரிய பேறினை தங்களின் இத்திட்ட நடைமுறை மூலம் அதாவது புதன்கிழமை சிக்கன விடுமுறை ஊடாக நீங்கள் எட்டியுள்ளீர்களா?
பேரவைத்தலைவர் அவர்களே!
உலகளாவிய பொது நெருக்கடி நிலையில், இந்தத்தீவிலே வாழும் ஒவ்வொரு குடிமகனும் எதிர்கொள்ளும் சவால்களை விடவும் வன்னிமக்கள் குறிப்பாக முல்லைத்தீவின் குடிமக்கள் இந்நெருக்கடியிலும் கூடுதல் இன்னல்களை சேர்ந்தே சுமக்க தலைப்பட்டுள்ளார்கள்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல…
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல…
ஒருபுறம் இந்தப் பொதுநெருக்கடியின் மகா வலியை எதிர்கொண்டவாறே மறுபுறம் அரசின் மகாவலியையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது!
தித்வா புயல் அனர்த்தம் நேர்ந்த பொழுது நாங்கள் எதிர்கொண்டது புயலை மட்டுமல்ல! புயலுக்குள்ளும் எங்கள் காணிகளை ஊடறுத்து வேலி போட்ட உங்கள் மகாவலியையும் தான்!
இப்போது நெடுவரிசைகளிலும் பதுக்கல்களிலும் நாங்கள் எதிர்கொள்வதும் மத்தியகிழக்கின் அதிர்வுகளை மட்டுமல்ல! மாறாக கொக்குத்தொடுவாய் மத்தியில் அடாத்தாக உப்பளம் அமைக்கவிட்ட உங்கள் மகாவலியையும் தான்.
கால்கடுக்க காத்திருந்து எரிபொருள் வாங்கி கடலுக்குச் சென்றாலும் என்ன பயன்!
அங்கு நீங்கள் கட்டுப்படுத்த தவறிய சட்டவிரோத தொழில்கள் ஒருபுறம். இறைமை தொலைந்த வடகடலில் உலவும் இந்திய இழுவைப்படகுகள் மறுபுறம்!
வெறும் படகோடு கரைக்கு மீள்வது தான் உங்கள் அரசு எங்கள் மீனவர்களுக்கு இதுவரை வழங்கியுள்ள நீதி – என்றார்.

