பாடசாலை மாணவர்களுக்கான உதவித்திட்டம் முன்னெடுப்பு…!
பாடசாலை மாணவர்களுக்கான உதவித்திட்டம் முன்னெடுப்பு…!
ஜேர்மன் நாட்டில் வசிக்கும் திரு. சுஜித்குமார் மற்றும் அந்நாட்டின் லேயர் வோக்கோஸ்ற் பகுதியில் வசிக்கும் ஈழத் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த நிதிப் பங்களிப்பில், திரு. நிமலன் பிருந்தாபன் மற்றும் மேனாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு. பரஞ்சோதி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய வித்தியாலயத்தின் முதல்வர், “இன்றைய நாள் எமது பாடசாலை வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான நாள். ‘தேவை’ என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அது நிறைவேறப் பல மாதங்கள் ஆகும் என்ற பொதுவான பிம்பத்தை உடைத்து, மிகக் குறுகிய காலப்பகுதியில் எமது மாணவர்களின் தேவையறிந்து உதவியுள்ளமை பாராட்டுதலுக்குரியது.
எமது மாணவர்களில் பலர் நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்கு வருகிறார்கள். அவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு பாதணி என்பது வெறும் உடை சார்ந்தது மட்டுமல்ல, அது அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த ஒரு விடயம். இதனை உணர்ந்து, நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாகச் செயற்பட்ட ஜேர்மனி வாழ் உறவுகளுக்கும், அதனை ஒழுங்கமைத்து வழங்கிவைத்திருக்கும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபையின் சாந்தபுர வட்டார கௌரவ உறுப்பினர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

