காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமை ப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு
வளமான நாடு -அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மொத்தம் 7 கிலோமீற்றர் நீளமான காரைநகர் சுற்றுவட்ட வீதியில், ஏற்கனவே 2 கிலோமீற்றர் நீளமான பகுதி புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பணிகளின் ஒரு பகுதியாக 2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேலும் எஞ்சியுள்ள 3 கிலோமீற்றர் வீதி, “டித்வா” மீள்கட்டுமானத் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, இவ்வாண்டுக்குள் முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.இப்பணிகளின் போது முறையான வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், தாழ்வான பகுதிகளில் வீதியை உயர்த்தி நிலையான முறையில் புனரமைப்பதும் திட்டமிடப்பட்டுள்ளது.நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேசசபையின் தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

