சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு – ரவிகரன் எம்.பி கடிதம்

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும்முயற்சி; சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு – ரவிகரன் எம்.பி கடிதம்.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு 07.03.2026 இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்தல் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மேற்படி விடயம் தொடர்பாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் TOPO PP70 இலக்க நில அளவை வரைபடத்தின் Inset 17, 18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களும் மகாவலி அதிகார சபையால் தென்பகுதியைச் சேர்ந்த ஒரு சிங்கள வர்த்தகருக்கு உப்பளம் அமைப்பதற்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு முரணான வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படி நடவடிக்கை அப்பகுதிக்குரிய மக்களிடையே அதிருப்தியையும் இரண்டு இனங்களுக்கு இடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த 2026.02.27 அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மேற்படி அத்துமீறிய செயற்பாட்டை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக, அதே நாள் (2026.02.27 மாலை 03.00 மணி) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி உப்பளச் செய்கையை அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரையிலும் நிறுத்திவைக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என மாவட்டச் செயலாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், 2026.03.06 ஆம் நாளாகிய நேற்று தொடக்கம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறித்த பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன.

எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது

Leave a Comment