படகு விபத்து: அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தில் நடந்த படகு விபத்தின் முழுமையான காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக கடற்படையினரும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதற்கான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளதோடு, துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி செய்துள்ளார்.
மேலும், விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மீட்பு நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் ஏற்படாத வகையில் அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆய்வு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

