வசரகால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி
வசரகால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து
விடுதலைப்போராட்ட காலத்தில் அவசர கால விதிமுறைக்குள்ளாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அத்தகைய அவசரகாலநிலை தற்போது மீண்டும் இந்தநாட்டில் அறிமுகப்படுத்தப்படும்போது, தமது உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள் இந்த அவசரகால நிலையையும் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
எனவே சட்ட ஏற்பாட்டுடனான மக்கள் மயப்பட்ட நடவடிக்கைகள், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் உரிமைசார்ந்த போராட்டங்கள் மற்றும் அவர்களின் இயல்பு வாழ்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலை ஒழுங்குவிதிகள் பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தேசிய பாதுகாப்பென்பது மக்களின் உரிமைகளோடு ஒத்திசைவதே எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் 06.03.2026இன்று இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் அரசதலைவரால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
பொதுமக்கள் பாதுகாப்புச் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28 ஆம் திகதிய 2477/46ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இலங்கையின் அரச தலைவரால் கொண்டுவரப்பட்ட அவசர கால நிலை கடந்த 2026.02.28 தொடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மீதான இறைமை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு மத்திய கிழக்கில் பரவும் போர்ச்சூழல் இலங்கைத் தீவையும் பாதிப்பதை நாம் எல்லோரும் உணர்கின்றோம். தீவுக்குரிய எரிசக்தி வழங்கல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை, கடலியல் சேவைகள், நாட்டுக்குரிய அந்நியச் செலாவணி போன்ற துறைகள் உலகளாவிய சூழமைவோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதால் இத்துறைகளில் ஏற்படுகின்ற பாதிப்பு எமது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றது.
உலக ஒழுங்கில் ஏற்படுகின்ற பொருளாதார அதிர்வுகளுக்கு ஏற்ப நாடு தயார்ப்படுத்தப்படுவதாக கடந்த 2026.03.03 அன்று சனாதிபதி அவர்களால் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் அளவுக்கான தாங்குதிறன் தொடர்பாகவும் எதிர்கால விரிவாக்கம் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. எரிபொருள் சேமிப்பு, சுத்திகரிப்புத் திறன், அத்தியாவசிய சேவைகளின் பராமரிப்பு, கடந்த கால நெருக்கடி நிலை தொடராதிருக்கும் வகையிலான இயல்தகு ஏற்பாடுகள் தொடர்பாகவும் சனாதிபதி அவர்களின் குறித்த உரையில் தெரிவிக்கப்பட்டது.
மேற்படியான இடர்நிலைகளை எதிர்கொள்வதிலும் அவற்றைக் கடந்து வருவதிலும் அவசர கால நடைமுறைகளுக்கு அப்பால் பாராளுமன்ற உறுப்பினர்களாக, வடகிழக்கின் சார்பாளர்களாக இவ்வரசாங்கத்தின் நேரிய முயற்சிகளுக்கு எமது ஆதரவு உண்டு என்பதை இந்தப்பேரவையில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஏனெனில், பொருளாதார நெருக்கடியையும் எரிபொருளுக்கான தட்டுப்பாட்டையும் தெற்கை விட நாங்கள் நன்கறிந்தவர்கள். சொந்தத் தீவுக்குள்ளாகவே அரசின் பொருளாதார தடைக்குள்ளும் தற்சார்போடு வாழ்ந்தவர்கள். எனவே அத்தகைய சூழல் மீண்டும் ஒருபோதும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது இந்தச்சபையில் உள்ள எம் அனைவரதும் பொறுப்பு தான்.
அதேவேளையில் பேரவைத் தலைவர் அவர்களே!
எவ்வாறு பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும் எங்களுக்கு புதிதானவை அல்லவோ அதுபோலவே தான் இந்த அவசர கால நடைமுறையும்.
தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள அவசர கால நிலை, தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகள், பொருளாதார உறுதி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் போன்ற கூறப்பட்ட நோக்கங்களுக்காக மட்டும்; பயன்படுத்தப்படுவதை இந்த அரசாங்கமும் இந்தப்பேரவையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மீயுயர் அதிகாரம் தேசிய நெருக்கடி காலங்களில் மக்களின் இயல்பு வாழ்வை இயலுமான வரையில் உறுதிப்படுத்த மட்டும் பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும். மாறாக அவை, கடந்தகாலங்களைப்போன்று தமிழர் குரல் வளையை நெரித்து, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைமுறைகளைத் வடகிழக்கில் தொடர்வதற்கான கருவியாக அமைதல் கூடாது.
விடுதலைப்போராட்ட வரலாற்றில் பல ஆண்டுகாலம் நாங்கள் அவசர கால விதிமுறைக்குள்ளாகவே வாழ்ந்தவர்கள். எனவே இத்தகைய சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம் அது தேசிய அளவில் இடர்நிலையை ஒழுங்கமைக்கும் செயற்பாடாக அல்லாது தமிழர் உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாகவே எமது மக்களால் பார்க்கப்படுகிறது. இது எமது மக்கள் மத்தியில் இயல்பாகவே அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குகிறது.
சட்ட ஏற்பாட்டுடனான மக்கள் மயப்பட்ட நடவடிக்கைகள், அமைதியான போராட்டங்கள், வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் அன்றாட இயல்பு வாழ்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஒழுங்குவிதிகள் பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
போருக்கு முன்னும் போரின் போதும் போருக்குப் பின்னருமாக எங்கள் இறைமைக்காக – தேசிய இருப்புக்காக – நிலத்துக்காக வாழ்வாதார மூலங்களுக்காக போராட்டமே வாழ்வாக தமிழர்கள் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.
போரின் போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டி போராடிக்கொண்டிருக்கின்றோம்.
உங்களிடம் நம்பி ஒப்படைத்து தொலைந்துபோன எங்கள் உறவுகளுக்கான நீதி வேண்டி போராடிக்கொண்டிருக்கின்றோம்
போரிலே அரசியல் கைதிகளாகி சிறையில் வாடும் எங்கள் உறவுகளின் விடுதலை வேண்டி போராடிக்கொண்டு இருக்கின்றோம்.
வெள்ளம் வந்தாலும் மண்சரிந்தாலும் தீப்பிடித்தாலும் ஏன்… உலக ஒழுங்கில் எந்தக்குழப்பம் நேர்ந்தாலும் ஓயாது தமிழர் நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கும் இந்த மகாவலி அதிகார சபை, வனவளத்திணைக்களம், வன சீவராசிகள் திணைக்களம், படையினர் என அரசின் குடியேற்றக் கட்டமைப்புகளிடம் இருந்து எங்கள் சொந்த நிலத்தை காப்பாற்றவும் எங்கள் உரிமைகளை தக்கவைக்கவும் தான் நாளும் போராடிக்கொண்டிருக்கிறோம்.
தீவுக்குள்ளாக உங்களுடனும் தீவுக்கு வெளியே இந்திய இழுவைப்படகுகளோடும் போராடுதலே வாழ்வாகிப்போகும் எங்களின் போராட்டங்களை மட்டுப்படுத்தும் வல்லாதிக்க கருவியாக இந்த அவசரகாலச்சட்டம் பயன்படுத்தப்படாதிருப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இந்த உலகளாவிய நிச்சயமற்ற பொழுதிலே, இந்த நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் பாதுகாக்கப்பட்டவர்களாகவும் மதிக்கப்படுபவர்களாகவும் உணர வேண்டியது கட்டாயத்தேவை.
சட்டம் நியாயமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை ஒவ்வாரு குடிமகனும் கொண்டிருக்கும் போது மட்டுமே தேசிய உறுதிப்பாட்டை அடைய முடியும்.
எனவே, தற்போதைய உலகளாவிய நெருக்கடியின் பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகளில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அவசரகால சட்ட முறைகளுக்கு அப்பால் நாம் ஆதரவளிக்கும் அதேவேளை, அவசரகால விதிமுறைகளுக்கு உள்ளும் புறமுமாக எங்களுக்கான கடந்தகால நீதியே இன்னும் தேக்க நிலையில் உள்ள போது, அவற்றுக்கான போராட்டமே எங்களின் வாழ்வாகும் போது
மற்றொரு அவசர கால நீட்டிப்பையும் மறுப்பதே எம் கடன்!
தேசிய பாதுகாப்பென்பது மக்களின் உரிமைகளோடு ஒத்திசைவதே என்பதை உங்கள் அரசாங்கத்தின் அவசரகால நிலையேனும் மெய்ப்பிக்கட்டும்!

