சிறுபோகத்திலும் நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சிய சாலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – ரவிகரன்
நெல் சந்தைப்படுத்தல்சபை சிறுபோகத்திலும் தவறிழைக்க முடியாது; சிறுபோக அறுவடைக்கு முன்னரே நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து.
நெல்சந்தைப்படுத்தல் சபையினர் தமது களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகளை அகற்றாது தேக்கிவைத்திருந்ததன் காரணத்தினால் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக காலத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்குரிய சிறுபோக காலத்திலும் நெல் சந்தைப்படுத்தல் சபை அத்தகைய தவறை செய்யக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறுபோக அறுவடைக்காலத்திற்கு முன்னரே நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தேங்கியுள்ள ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரியவகையில் அகற்றப்பட்டு, சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி கொள்வனவுசெய்வதற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஆகியோரும் இந்த விடயத்தில் உரியவகையில் கவனம் செலுத்தவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இம்முறை பெரும்போகத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விற்பனைசெய்வதற்கு விவசாயிகள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
குறிப்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையினரின் நெற்கொள்வனவில் ஏற்பட்ட தாமதத்தினாலேயே விவசாயிகள் தமது நெல்லினை அரசின் நிர்ணயவிலையில் விற்பனைசெய்வதற்கு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
நெல்சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகள் நிறைந்திருப்பதாகவும், அதனால் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு முடியவில்லை என நெல்சந்தைப்படுத்தல் சபையின் உத்தியோகத்தர்களால் பதிலளிக்கப்பட்டிருந்தது. இதனால் நெல்சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறு நெல்சந்தைப்படுத்தல்சபையின் நெற்கொள்வனவில் தாமதம் ஏற்பட்டதால், விவசாயிகள் அரசின் நிர்ணய விலையில் நெல்லை தமது நெல்லை விற்பனை செய்வதற்கு பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
பல விவசாயிகளால் அரசின் நிர்ணய விலையில் தமது நெல்லை விற்பனை செய்யமுடியாமல், குறைந்த விலையில் தமது நெல்லினை தனியார் நெற்கொள்வனவாளர்களிடம் விற்பனைசெய்து நட்டம் அடையவேண்டிய சூழல் ஏற்பட்டது.
விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகவும், வருமானத்தை ஈட்டிக்கொள்ளவும் நெற்செய்கையினை மேற்கொள்கின்றனர். ஆனால் நெல்சந்தைப்படுத்தல் சபை உரிய நேரத்தில் விவசாயிகளிடமிருந்து நேற்கொள்வனவை மேற்கொள்ளத் தவறியதால் விவசாயிகள் அரசின் நிர்ணய விலைக்கு நெல்லை விற்பனை செய்யமுடியாமல் குறைந்த விலையில் விற்பனைசெய்து பாரிய நட்டத்தை அடைந்துள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல்சபை 2026ஆம் ஆண்டு சிறுபோகத்திலும் இத்தகைய தவறினை இழைக்கக்கூடாது. சிறுபோக நெல் அறுவடை இடம்பெறுவதற்கு முன்னரே, விவசாயிகளிடமிருந்து நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகளைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்தவிடயத்தில் வன்னிமாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளரும் உரியவகையில் கவனஞ் செலுத்தவேண்டுமெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

