வவுனியா 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ. 950 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியா நகர அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ. 250 மில்லியனும், பிரதேச அபிவிருத்தியின் கீழ் 36 வீதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 250 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் உள்ள 9 பெரிய பாலங்களைப் புனரமைப்பதற்காக ரூ. 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது, மாவட்டத்தில் மின்சார வசதியற்ற நிலையில் உள்ள 695 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் வசமுள்ள குளங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் விவசாய சேவைகள் திணைக்களத்திடம் கையளிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.இந்நிகழ்வில் வன்னி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.2026 ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள், பாலங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு இந்தத் தீர்மானங்கள் ஒரு வலுவான அடிப்படையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

