சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் அமைப்புகளின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கோரி முக்கிய கலந்துரையாடல்!
சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் அமைப்புகளின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினருடன் முக்கிய கலந்துரையாடல்!
நிதியமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தினால், சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளவுள்ள இடர்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணச் சமூகச் செயற்பாட்டு மையம் மற்றும் அதனுடன் இணைந்த கிராமிய நுண்கடன் சேவை வழங்கும் அமைப்புகள் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தன.
குறித்த கலந்துரையாடலில், நிதியமைச்சினால் முன்மொழியப்பட்ட இச் சட்டத்தினால் நுண்கடன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்படப்போகும் இடையூறுகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இச்சட்டமானது நுண்கடன் சேவை வழங்குநர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டிருந்தாலும், ஏனைய விடயங்கள் அக்குறிக்கோளைப் பாதிப்பதாக அமைந்துள்ளன.
மிகக் குறிப்பாக:
1.சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் சேவை வழங்குநர்களை ஒரு தனி அலகாக அங்கீகரிப்பதைப் புறக்கணிக்கிறது. இதன் மூலம் அவர்களின் தனித்துவமான குறைந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நெகிழ்வான நடைமுறைகளை அழித்து, நடைமுறைக்கு ஒவ்வாத பதிவுத் தேவைகளை அவர்கள் மீது சுமத்துகிறது.
2.சமூக சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்குநர்களின் சுயாட்சியை நீக்குகிறது.
3.தொடர்ச்சியான மற்றும் அவசர நெருக்கடிகளைத் தவிர்க்கத் தேவையான இலாப நோக்கற்ற கடன் மற்றும் மனிதாபிமானமற்ற கடன் மீட்பு நடைமுறைகளைத் தடுக்க, சட்டபூர்வமாக அமுல்படுத்தக்கூடிய நுகர்வோர் பாதுகாப்பை அறிமுகப்படுத்தத் தவறிவிட்டது.
4.கடன் தகவல் பணியகத்தை (CRIB) அடிமட்ட நிறுவனங்களின் நிலைக்கு விரிவுபடுத்துவதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட மக்களின் நிதி உரிமைகளைப் பறிப்பதை ஊக்குவிக்கிறது.
போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்திலிருந்து சமூக சேமிப்பு மற்றும் கடன் சேவைகளுக்கு உடனடி விலக்களிக்குமாறும், இலங்கைச் சேமிப்பு வங்கியை மீண்டும் செயற்படுத்துமாறும் அரசை வலியுறுத்துமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான “அறிவகத்தில்” நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் யாழ்ப்பாணச் சமூகச் செயற்பாட்டு மையத்தின் (JSAC) முகாமையாளர், ஊழியர்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட நுண்கடன் சேவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

