திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட் டோருக்கு நீதிமன்றின் உத்தரவு
திருகோணமலை டச்சு பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவி கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (09) காலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் அடங்கலாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தின் அனுமதி இன்றி புத்தர் சிலை நிறுவப்பட்டு கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த திணைக்களம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

