சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு
தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று 02.02.2026இன்று இடம்பெற்றது.
அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சாந்தி சிறீஸ்கந்தரசா, மு.சந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரான க.துளசி, சிறீரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டார்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment