கடலரிப்புகளின் ஆபத்திலிருந்து அம்பாறை கரையோரங்களை பாதுகாக்க அரசுக்கு மகஜர்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நிலவும் தீவிர கடலரிப்பு தொடர்பான பாதிப்புகளைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசாங்கத்திடம் கூட்டு மகஜர் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் கூடிய பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பொத்துவில்.ஆக்கிய பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன
மாளிகைக்காடு மையவாடிப் பகுதியில் கடலரிப்பு தீவிரமடைந்ததில், அங்குள்ள ஜனாஸாக்களின் (உடல்கள்) எச்சங்கள் வெளியே தெரியும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடலரிப்பு நிலவரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், அம்பாறை மாவட்ட கடலரிப்பு மற்றும் ஒலுவில் துறைமுகப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
அம்பாறை கரையோரப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மீனவர் சங்கங்கள் இணைந்து அரசுக்கு அனுப்பத் தயாராகி வரும் மகஜரில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன:
-
நிரந்தர கல் அணை: தற்காலிக தீர்வாக மணல் மூட்டைகளை அடுக்கும் முறையை விடுத்து, நீண்ட கால அடிப்படையில் கருங்கற்களைக் கொண்டு பாதுகாப்பான அணை அமைக்கப்பட வேண்டும்.
-
ஒலுவில் துறைமுக ஆய்வு: கடலரிப்புக்கு ஒலுவில் துறைமுக நிர்மாணமும் ஒரு காரணம் என மக்கள் கருதுவதால், அது குறித்த தொழில்நுட்ப ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
-
மீனவர் பாதுகாப்பு: கரையோர வீதிகள் மற்றும் மீனவ வாடிகள் சேதமடைந்துள்ளதால், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க விசேட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
-
மையவாடி பாதுகாப்பு: மாளிகைக்காடு போன்ற உணர்வுப்பூர்வமான பகுதிகளைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.என அரக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

