எட்டு மாவட்டங்களில் டெங்கு அபாயங்கள்
நாட்டில், எட்டு மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
நாட்டில், எட்டு மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுச்சூழல் மற்றும் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதில் காட்டப்படும் அசிரத்தையே இந்நிலைமைக்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார். எனவே, டெங்கு பரவலைக் குறைப்பதற்காக பொதுமக்கள் அதிகளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்,டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா,கண்டி,காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில்,சுமார் 25-30 சதவீதம் பேர் இதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.டெங்கு நோயை கட்டுப்படுத்த மக்களிடையே ஆர்வம் இல்லாதுள்ளதால்,ஜனவரி முதல் வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பொது மக்களின் பங்களிப்பு வேண்டும் எனவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன மேலும் தெரிவித்துள்ளார்.

