தித்வா புயலினால் வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை பட்டியலிட்ட ரவிகரன் எம்.பி;
தித்வா புயலினால் வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை பட்டியலிட்ட ரவிகரன் எம்.பி; பாதிப்புக்களை சீர்செய்ய அரசின் 2026பாதீடு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை
காணொளி
தித்வா புயலினால் முல்லைத்தீவு, வுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் தரவுகளுடன் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை மிகவும் கடுமையாக தித்வாபுயலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் குளச்சேதங்களுக்கான நிரந்தரத்தீர்வு, பொருத்தமற்ற வாழ்விட மக்களுக்கான மாற்று வாழ்விட ஏற்பாடு, கைவிடப்பட்ட குளங்களை பராமரித்தல், ஆற்றுப்படுக்கைகளை எல்லைப்படுத்தல், குளங்களை உரிய திணைக்களங்களிடம் பாரப்படுத்தல், வெள்ளத்தால் தனிமைப்படுத்தபடும் கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான நிரந்தரத்தீர்வு, விவசாய வீதிகள் சீரமைப்பு, வெள்ளநீர்-உவர்நீர் கட்டுப்பாட்டு அணைகள் கட்டுமானம், நகர்ப்பகுதிகளுக்கான நிரந்தர வடிகாலமைப்பு நடைமுறைப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு அரசின் 2026 பாதீடு வாய்ப்பளிக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் 19.12.2025இன்று இடம்பெற்ற திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ரூபா500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
2004 சுனாமிக்குப் பின்னர் இலங்கையில் அதிகளவு பாதிப்பை தித்வா புயல் ஏற்படுத்தி உள்ளது.
தித்வா புயலால் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வு முற்றாக நிலைகுலைந்தது. வீதிப்போக்குவரத்து முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் சிலநாள்கள் செயலிழந்தன. 45 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் 5 நாள்கள் அளவில் நீரில் மூழ்கின.
ஐந்து நாள்களுக்கு மேலாக மீன்பிடி முற்றாக தடைப்பட்டது. 22918 குடும்பங்களைச் சேர்ந்த 67340 பேர் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டனர். 40 இடைத்தங்கல் முகாம்களில் 1191 குடும்பங்களைச் சேர்ந்த 3591 பேர் பாதுகாக்கப்பட்டனர். 32 வீடுகள் முற்றாகவும் 1379 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. 250 இற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் நீளம் கொண்ட 193 சாலைகள் சேதப்பட்டன. 5 மதகுகள், 30 பாலங்களில் சேதநிலைகள் இதுவரை அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளன.
நாயாற்றுப்பாலம் ஊடான போக்குவரத்து இன்று வரை வழமைக்கு திரும்பவில்லை. 9 பாரிய, நடுத்தர அளவிலான குளங்களும் 32 சிறுகுளங்கள் சேதப்பட்டன. 30 படகுகள், 147 நன்னீர் சிறுபடகுகள் தொலைந்துள்ளன. 8800 இற்கும் மேற்பட்ட கால்நடைகளை முல்லைத்தீவு இழந்துள்ளது. புயல் மற்றும் வெள்ள இடர்ச்சியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழக்கவில்லை. ஒருவர் காயமுற்றார். இவற்றுக்கும் மேலாக அபாயநிலையில் தற்பொழுது 4604 வீடுகள் உள்ளன.
13.12.2025 இன் படியாக 23641 குடும்பங்களைச் சேர்ந்த 77451 பேர் மன்னாரில் பாதிக்கப்பட்டனர். நால்வர் உயிரிழந்தனர். 88 பாதுகாப்பு நிலையங்களில் 5580 குடும்பங்களைச் சேர்ந்த 18088 பேர் பாதுகாக்கப்பட்டனர். 70 வீடுகள் முற்றாகவும் 1517 வீடுகள் பகுதியளவிலும் சேதப்பட்டன. 22ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்நிலம் பாதிப்படைந்தது. 45ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை மன்னார் நிலம் இழந்தது. 151 படகுகள் சேதமடைந்தன.
09.12.2025 இன் படியாக 6076 குடும்பங்களைச் சேர்ந்த 19868 பேர் வவுனியாவில் பாதிக்கப்பட்டனர். 15 வீடுகள் முற்றாகவும் 864 வீடுகள் பகுதியளவிலும் சேதப்பட்டன. 58 பாதுகாப்பு நிலையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். 349 சாலைகள், 34 மதகுகள் மற்றும் பாலங்கள், 24 வடிகால்கள் 4 நீர் வழங்கல் அலகுகள் சேதப்பட்டன. 124 குளங்கள் பாதிப்படைந்தன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை வவுனியா நிலம் இழந்தது.
கடந்த இருபதாண்டுகளில் இந்தத் தீவு சந்தித்த பெரும் இயற்கை அனர்த்தம் இது. தீவில் பெரும்பாலான மாவட்டங்கள் பாதித்தன. பெரும் எண்ணிக்கையிலான மலையக உறவுகளை இந்த இடர்ச்சியில் நாம் இழந்து தவிக்கிறோம்.
இப்பேரிடரில் உயிரை, உடமையை, வாழ்வாதார மூலங்களை இழந்துள்ள குடும்பங்களுடன் நின்று பாதிப்பில் இருந்து மெல்ல மீள வேண்டிய அதே நேரம் இத்தகைய இழப்புகள் மீண்டும் தொடரக்கூடாத வகையில் நிலைபேறான மீட்சியை இந்தத் தீவிலே ஏற்படுத்த நாம் அனைவருமே உறுதிகொள்ள வேண்டும்.
சாலைகள், பாலங்கள், மதகுகள், கால்வாய் மற்றும் வாய்க்கால்களின் கட்டுமானம் அடுத்த சில ஆண்டுகளில் நிலைகுலைந்து போகாத வகையில் முறையான திட்டமிடலுடன் மேற்கொள்ளப்படுவதை இந்த அரசு உறுதி செய்யவேண்டும்.
மாவட்டந்தோறும் தீர்க்கமான வடிகாலமைப்புக்குக்கான பெருந்திட்டம் தீட்டப்பட்டு அதற்கு அமைவான ஆண்டுத்திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுவதை அரச நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
முல்லைத்தீவில் உடைப்பெடுத்த சில குளங்களுக்கு மழைக்காலத்திலான கட்டுமானங்களும் வலுச்சேர்த்துள்ளது. இது முறையற்ற திட்டமிடலையும் வெளிக்காட்டுகிறது.
பொருத்தமற்ற நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களால் அரசு நிதி வீணாக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஒரு முப்பது அடிப்பாலம் கண்டாவளையில் கட்டி முடிக்கப்படாதிருப்பதும் ஊழலின் சாட்சியே! உட்கட்டமைப்பு விருத்திகளில் நடைபெறும் ஊழல்களையும் இந்தப்பேரிடர் வெளிக்கொண்டுவந்துள்ளது.
பேரிடரின் தாக்கத்தில் இருந்து அனைவருமாய் மீள எழத்தக்க வகையில் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அது போல இனிவரும் காலத்தில் இத்தகைய இடர் வராதிருக்கும் வகையில் இடர்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வினைத்திறனான நீர் மேலாண்மையை பேணத்தக்க வகையில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதும் இன்றியமையாதது.
ஆழிப்பேரலையின் பின்னர் கடற்கரையோரங்களில் இருந்து மக்களின் வாழ்விடங்கள் உயரச்சென்றதைப் போல இப்பேரிடரின் பின்னர் மக்களை மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் இருந்தும் தாழ்நில பகுதிகளில் இருந்தும் வேற்றிடத்திற்கு குடியமரச்செய்து பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைத்தீவு ஆழிப்பேரலை பேரிடரை எதிர்கொண்ட மாவட்டம். கடந்த மாத பெரும் புயலின் பெரும்பாதிப்பையும் எதிர்கொண்ட மாவட்டம். அபிவிருத்தியின் அளவுகோலில் பலவற்றிலும் “இல்லை” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நீர் மேலாண்மையும் இன்னும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது.
இதைப்போல் இனியொரு பொழுது வேண்டாம் என்பதற்குரிய முல்லைத்தீவின் உடன் தேவைகளை இந்தப்பேரவையிலே முன்வைக்கிறேன்.
குளச்சேதங்களுக்கான நிரந்தரத்தீர்வு, பொருத்தமற்ற வாழ்விட மக்களுக்கான மாற்று வாழ்விட ஏற்பாடு, கைவிடப்பட்ட குளங்களை பராமரித்தல், ஆற்றுப்படுக்கைகளை எல்லைப்படுத்தல், குளங்களை உரிய திணைக்களங்களிடம் பாரப்படுத்தல், வெள்ளத்தால் தனிமைப்படுத்தபடும் கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான நிரந்தரத்தீர்வு, விவசாய வீதிகள் சீரமைப்பு, வெள்ளநீர்-உவர்நீர் கட்டுப்பாட்டு அணைகள் கட்டுமானம், நகர்ப்பகுதிகளுக்கான நிரந்தர வடிகாலமைப்பு நடைமுறைப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு தங்களின் 2026 பாதீடு வாய்ப்பளிக்க வேண்டும் என அரசிடம் இந்த பேரவை ஊடாக கேட்டுக்கொள்கிறேன்.
■ குளச்சேதங்களுக்கான நிரந்தரத் தீர்வு.
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
முல்லைத்தீவில் 32 சிறு குளங்கள் சேதப்பட்டுள்ளன. முல்லைத்தீவின் பேரளவிலான குளமாக காணப்படும் முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக்குளம் காலதாமதமின்றி மிகவிரைவாக சீர் செய்யவேண்டிய தேவை காணப்படுகிறது. வவுனிக்குளத்திலும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாதிருப்பதன் பொருட்டு வவுனிக்குள மேம்பாடு கருதிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் இந்த உயரிய சபையின் ஊடாக அரசின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
■ பொருத்தமற்ற வாழ்விட மக்களுக்கான மாற்று வாழ்விட ஏற்பாடு
ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் முதன்மையானவை, மன்னாகண்டலில் உள்ள வசந்தபுரம் கிராமம், பண்டாரவன்னி கிராமம் மற்றும் சிராட்டி குளம் கிராமம்.
ஓராண்டு வரையான சொத்துகளில் பெரும்பாலானவற்றை ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத வெள்ளத்தில் அம்மக்கள் பறிகொடுக்கின்றனர். இம் மூன்று இடங்களிலும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தையும் வீட்டையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
■ கைவிடப்பட்ட குளங்களைப் பராமரித்தல், ஆற்றுப்படுக்கைகளை எல்லைப்படுத்தல், குளங்களை உரிய திணைக்களங்களிடம் பாரப்படுத்தல்.
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
20 நடுத்தர, பெரிய குளங்களையும் நூற்றுக்கணக்கான சிறுகுளங்களையும் 19 ஆற்றுப்படுக்கைகளையும் முல்லைத்தீவு கொண்டுள்ளது. குளம் நிரம்பி வான் பாயும் போதும் நிரம்பி நீர் வழியும் போதும் உடைப்பெடுத்து பாயும் போதும் பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
முல்லைத்தீவில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு பராமரிக்கப்படாது உள்ள கழிவாறுகளும் காரணமாகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கழிவாறுகளை உடனடியாக துப்புரவுசெய்து அவற்றை எல்லைப்படுத்தி, கழிவாறுகளில் உள்ள தடைகளை அப்புறப்படுத்தி அவற்றை அகலப்படுத்தும் போது குளத்தின் கீழ்ப்பகுதிகளில் இருந்து வருகின்ற நீர் விரைவாகத் தடையின்றிச் செல்லும். இதன் மூலம் ஆற்றங்கரைகளில் வெள்ளப்பெருக்கை தடுக்க முடிவதோடு குளங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்த இயலும்.
பதிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவில் 483 சிறுகுளங்கள் உள்ளன. இவற்றுள் 181 குளங்கள் கைவிடப்பட்டு உள்ளன. சிறுகுளங்கள் உடைப்பெடுத்து பாயும் வெள்ள நீர் நடுத்தர மற்றும் பெரிய குளங்களுக்கு மேலும் பாதிப்பைக் கொண்டுவருகின்றன. சிறுகுளங்களை பராமரிக்கும் வகையில் உரிய திணைக்களங்களிடம் பாரப்படுத்தும் போது மாவட்டத்தின் வரட்சியை போக்கமுடியும். எதிர்கால வெள்ளப்பாதிப்பையும் குறைக்கமுடியும்.
வனவளத்திணைக்களத்திற்கும் படையினருக்கும் குளங்களும் ஆற்றுப்படுக்கைகளும் ஏன்?
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 21 குளங்கள் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அக்குளங்களை எல்லைப்படுத்தி அவற்றை உரிய திணைக்களங்களிடம் கையளித்து அவற்றை உரிய திணைக்களங்களே பராமரிப்பதற்கு இந்த அரசு வழி காட்ட வேண்டும். 438 பயனாளிகளுக்கான 1483 ஏக்கர் வாழ்வாதார நிலம் வனவளத்திணைக்களத்தின் கையகப்படுத்தலால் பயன்பாடற்று உள்ளது. கைவிடப்பட்ட குளங்களை உரியவாறு பராமரித்தால் கட்டற்ற வெள்ள நீர் பாரிய நடுத்தர குளங்களை ஆக்கிரமிப்பதையும்; கட்டுப்படுத்த முடியும்.
பொருத்தமற்ற திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களையும் ஆற்றுப்படுக்கைகளையும் உரிய திணைக்களங்களுக்கு எல்லைப்படுத்தி அவற்றின் தொடர் பராமரிப்பை உறுதி செய்யுமாறு இந்த பேரவையின் கேட்டுக்கொள்கிறேன்.
■ வெள்ளத்தால் தனிமைப்படுத்தபடும் கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான நிரந்தரத்தீர்வு
ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மழை வெள்ளத்தில் மாந்தை கிழக்கு பிரதேசம் தனிமைப்படுத்தப்படுகிறது. மாந்தை கிழக்கு குத்துப்பாலத்தின் ஊடான அதிக நீர் வரத்து மாந்தை கிழக்கைத் தனிமைப்படுத்துகிறது. குறித்த பாலத்துக்கான மாற்றுப் பாலம் உயரமாகவும், பலமாகவும் கட்டமைக்கப்படல் வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மேழிவனம் கிராமமும் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்படுகிறது. அதே போல் புதுக்குடியிருப்பு பிரதேசமும் கேப்பாபுலவு வழி ஊடாகவும் ஒட்டுசுட்டான் வழி ஊடாகவும் அதிக வெள்ளநீர் ஊடறுத்துப் பாயும் போது குறிப்பிட்ட சில நாள்கள் முற்றாக துண்டிக்கப்படும் நிலையை எதிர்கொள்கிறது.
மேழிவனம் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஓர் ஆற்றுச்சருக்கையையும் (கோஸ்வே) கேப்பாப்புலவு வழி ஊடான புதுக்குடியிருப்பு பாதையில் உள்ள இரண்டு ஆற்றுச்சருக்கைகள், ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வழியில் உள்ள ஓர் ஆற்றுச்சருக்கை என்பவற்றில் உயரமான பெட்டிப்பாலங்களை நிருமாணிக்கும் போது வெள்ள அனர்த்தத்தின் போது மேற்படி பிரதேசம் மற்றும் கிராமங்கள் போக்குவரத்தில் முற்றாக துண்டிக்கப்படும் நிலையை தவிர்த்துக் கொள்ள முடியும்.
■ விவசாய வீதிகள் சீரமைப்பு
நித்தகைக்குள வீதி, அக்கரைவெளி வீதி, புளியமுனை வீதி, கொண்டைமடு கேப்பாப்புலவு வீதி உள்ளிட்ட விவசாய வீதிகளின் சீராக்கமும் இன்றியமையாதது. இவற்றை சீரமைக்கும் போது ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்களின் விளைச்சல் உறுதிப்படுத்தப்படுத்தப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் பாரியளவான நேரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
■ வெள்ளநீர்-உவர்நீர் கட்டுப்பாட்டு அணைகள் கட்டுமானம்
முல்லைத்தீவின் வெள்ளநீர் கடலுக்கு சாலை, நந்திக்கடல், நாயாறு, கொக்கிளாய் ஆகிய பகுதிகளால் கடலுடன் சேர்கிறது.
நந்திக்கடல், வெட்டுவாய்க்கால் முகத்துவாரம் ஊடாக கடக்கும் வழியில் முன்னைய காலத்தில் முல்லைத்தீவில் காணப்பட்ட வண்டில் பாதை ஒரு குறுக்கணையாக அமைந்து மேலதிக நீரை வெளியேற்றும் வகையிலும் உவர் நீர் வயல்நிலங்களில் கலக்காதிருப்பதையும் உறுதிப்படுத்தியது. குறித்த வண்டில் பாதை மீளவும் குறுக்கணையோடு அமைக்கப்படுவது பெருமளவு நீர் கடலோடு சேர்வதை தடுக்கும்.
தண்ணிமுறிப்புக் குளத்தில் இருந்து அதிக நீர் வெளியேற்றப்படும் போது செம்மலை, குமுழமுனை கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த வெள்ளப்பெருக்கில் மேற்படி சூழலில் செம்மலையின் உவர் நீர் தடுப்பணை உடைந்துள்ளது. இப்பகுதியிலும் குறுக்கணை ஒன்றுக்கான தேவை உள்ளது.
■ நகர்ப்பகுதிகளுக்கான நிரந்தர வடிகாலமைப்பு நடைமுறைப்படுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வினைத்திறனற்ற வடிகாலமைப்பு சீரின்மையால் புதுக்குடியிருப்பு மற்றும் மாங்குளம் நகர்ப்பகுதிகள் ஒவ்வோராண்டும் பாதிக்கப்படுகின்றன.
புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் ஏற்கனவே கொங்கிறீட் வடிகால் அமைக்கப்பட்டபோதும் அதன் தொடர்ச்சி புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து இரணைப்பாலை சாலை வரை நீட்டப்படவேண்டும்.
வடமாகாணத்தின் மையமாக உள்ள மாங்குளம் நகர்ப்பகுதியும் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்கிறது. நகரை அண்டிய நிரந்தர வடிகாலமைப்பு மாங்குளத்தில் மேற்கொள்ளப்படவேண்டும்.
பேரவைத் தலைவர் அவர்களே!
சுனாமி, தித்வா என்று தொடரும் பேரனர்த்தங்களுக்கும் மேலாக ஒவ்வோராண்டும் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்படல், சொத்தழிவு ஏற்படல் உள்ளிட்டவற்றுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். முல்லைத்தீவு மக்களின் நிலைபேறான வாழ்வு கருதி நிரந்தர நீர் மேலாண்மைக்கான மேற்படி அபிவிருத்திப் பணிகளுக்கு 2026 இல் முன்னுரிமை அளியுங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.

