இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வெளிநாடுகளி லிருந்தவாறு இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான உரிமையில் விசேட கவனம்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்கிருந்தவாறே தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பில்,வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்நாடுகளிலிருந்தவாறே தேர்தல்களில் வாக்களிப்பது தொடர்பான பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வருகை தந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்பதற்கான நிகழ்வின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தேர்தல் ஆணைக்குழு, தேர்தல்கள் முறைமைக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை அலுவலகத்துடன் இணைந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் ஆதரவுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிராந்திய பிரதிநிதிகளை உத்தியோகபூர்வமாக வரவேற்பதும், வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டில் வாக்களிப்பது மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும். இலங்கையில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில், சர்வதேச அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கையுடனான அவர்களின் தொடர்பு ஒரு எல்லைக்கு அப்பாற்பட்டது. அவர்கள் இன்னமும் தங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளனர்.

அந்நாடுகளிலிருந்தவாறே உள்ளூர் தேர்தல்களில் அவர்கள் வாக்களிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை போன்ற விடயங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஏனைய நாடுகளின் அனுபவங்களிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளன. உலகளாவிய சமூகத்தின் யதார்த்தங்களுக்கு எமது தேர்தல் கட்டமைப்பு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த பிராந்திய கருத்துப் பகிர்வு மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

அன்மைச் செய்தி

Leave a Comment