முள்ளிவாய்க்கால் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்பு பூர்த்தி;
ரவிகரன் எம்.பியின் கடும் பிரயர்த்தனத்தினால் முள்ளிவாய்க்கால் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்பு பூர்த்தி; மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது.
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய கடுமையான தொடர்முயற்சியின் பலனாக, முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது.
இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்த குறித்த பிலவுவெளி கமவீதியானது 20.07.2026இன்று மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு- முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிலுள்ள, முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் பிலவுவெளி கமவீதி மற்றும் அரசடி கமவீதி என்பன சீரின்றிக்காணப்பட்டது.
இத்தகையசூழலில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் விதைநெல், உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும், அறுவடைசெய்த நெல்லினை எடுத்துச்செல்வதிலும் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 14.08.2025அன்று குறித்த பகுதிக்கு நேரில்சென்று நிலமைகளை ஆராய்ந்ததுடன், குறித்த பிலவுவெளி கமவீதி மற்றும் அரசடி கமவீதிகளைச் சீரமைப்புச் செய்வதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவுந் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த வீதிகளைச் சீரமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முள்ளியவளை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம் தயாரூபனிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து 300ஏக்கர்வரையான வயல்நிலங்களுக்குச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் குறித்த கமவீதிகளைச் சீரமைக்கும் பணிகள் முள்ளியவளை கமநலசேவைநிலயத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்தவகையில் அரசடி கமவீதியானது தற்போது 1.1மில்லியன் ரூபாய் பெறுமதியில் 300மீற்றர் வரையில் பெரண்டீனா நிறுவனத்தின் நிதி உதவியில் சீரமைக்கப்பட்டுள்ளது. மிகுதிச் சீரமைப்புப் பணிகள் பெரண்டீனா நிறுவனத்தின் நிதி உதவியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இத்தகையசூழலில் பிலவுவெளி கமவீதியானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒதுக்கீட்டு நிதியில், 07மில்லியன்ரூபாய் பெறுமதியில்1.25கிலோமீற்றர் சீரமைக்கப்பட்டது. அந்தவகையில் பிலவுவெளி கமவீதியின் சீரமைப்புப் பணிகள் பூத்தியானதையடுத்து, குறித்த வீதியானது 20.07.2026இன்று மக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
குறித்த திறப்புவிழா நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட கமநல பிரதி ஆணையாளர், முள்ளியவளை கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதிகளில் சீரமைக்கப்படாமல் காணப்படுகின்ற பல கமவீதிகள், உள்ளகவீதிகளைச் சீரமைப்பது தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

