குருதிப் பரிசோதனைக்கு அதிக கட்டணம்; யாழ். வைத்தியசாலைக்கு ரூ. 3 மில். அபராதம்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, இரத்தப் பரிசோதனைக்காக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தமை தொடர்பில் ரூ. 30 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு (CAA) கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டு, இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை இரத்தப் பரிசோதனைக்காக (FBC) நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச கட்டணமான ரூ. 400 இற்கு பதிலாக ரூ. 550 அறவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை 13ஆம் திகதியன்று இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அவ்வைத்தியசாலையில் சோதனை நடத்தியதோடு, இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியசாலை நிர்வாகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றினால் ரூ. 30 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த விதிமீறல் தொடர்பான செய்தியை தேசிய பத்திரிகைகளில் வைத்தியசாலையின் சொந்தச் செலவில் விளம்பரமாக வெளியிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்ப்பதோடு, குறித்த சேவைகளுக்கான பற்றுச்சீட்டை எப்போதும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1977 எனும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இலக்கதிற்கு அழைக்குமாறு பொதுமக்களை அதிகாரசவை அறிவுறுத்துகின்றது

