தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கீரிமலை – மாவிட்டபுரம் பகுதிகள் குப்பைக் கிடங்காகும் அபாயம்;

யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகள் எதிர்காலத்தில் பாரிய குப்பைக் கிடங்காக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளிட்ட முக்கியமான ஆலயங்களை அண்மித்த பகுதிகளில், குறிப்பாக மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியை அண்மித்துள்ள பாரிய குழிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் குறித்த பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக பாரிய குழிகள் உருவாகியுள்ளன. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டன. இதனையடுத்து, வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக முகாம்களில் வசித்த காணியற்ற குடும்பங்களுக்கு ‘நல்லிணக்கபுரம் மாதிரி கிராமம்’ என்ற பெயரில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு, குறித்த பாரிய குழிகளை அண்மித்த பகுதிகளில் மக்கள் குடியேற்றப்பட்டனர்.

குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர், குறித்த குழிகளில் கழிவுகள் கொட்டப்படத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் உக்கக்கூடிய கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், பின்னர் இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளும் எவ்வித உரிய கண்காணிப்பும் கட்டுப்பாடுகளுமின்றி கொட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு எதிராக 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

அப்போது தென்கொரிய நிதியுதவியுடன் ‘சுகாதார நில நிரவுகைத் திட்டம்’ ஊடாக குறித்த குழிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குழிகளின் அடிப்பகுதியில் தடித்த பொலித்தீன் விரிப்புகள் அமைத்து, அதன் மீது கழிவுகளை கொட்டி, நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படிப்படியாகக் குழிகளை நிரப்பி, பின்னர் மண்ணிட்டு மூடுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இவ்வாறான முறையில் குழிகளை முழுமையாக நிரப்புவதற்கு 25 முதல் 30 ஆண்டுகள் வரை காலம் எடுக்கும் எனவும், அந்தக் காலப்பகுதியில் கழிவுகளைத் தேடி வரும் பறவைகள் மற்றும் விலங்குகளால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்புகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து, பலர் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சில வருடங்களாக பாரியளவில் கழிவுகள் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் குறித்த குழிகளில் கழிவுகள் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வலி வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், வலி தெற்கு பிரதேச சபை மற்றும் கடற்படையினர் கழிவுகளை கொண்டு வந்து கொட்ட முயற்சிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த பகுதியில் முதலீட்டு வலயம் உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கீரிமலையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சூழலில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவது முதலீட்டு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கழிவுகள் கொட்டப்படும் இடத்திற்கு மிக அருகில் கடல் காணப்படுவதால், மழைக்காலங்களில் கடல் நீர் உட்புகும் பட்சத்தில் கழிவுகள் காரணமாக கடல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கழிவுகள் கொட்டப்படுவதை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் உறுப்பினர்கள் இந்த விடயத்தை பிரஸ்தாபித்து, குறித்த பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை வலி வடக்கு பிரதேச சபையின் சுகாதாரக் குழு உறுப்பினர்கள் குறித்த பகுதிக்கு சென்றபோது, டிப்பர் வாகனம் ஒன்றில் கடற்படையினர் கழிவுகளை கொண்டு வந்து கொட்ட முயன்றதாகவும், அதனை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று, வலி தெற்கு பிரதேச சபையினரும் கழிவுகளை கொட்டுவதற்காக வாகனங்களுடன் வந்த நிலையில், அவர்களையும் அங்கு கழிவுகளை கொட்ட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு உறுப்பினர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தவிசாளர், உரிய அனுமதியின்றி எவரும் அப்பகுதியில் கழிவுகளை கொட்ட முடியாது எனத் தெரிவித்து, கழிவுகளை ஏற்றிவந்த வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளார்.

மேலும், குறித்த குழிகளுக்குச் செல்லும் பாதையில் காணப்பட்ட நுழைவாயிலுக்கு பூட்டு போட்டு மூடியுள்ளார். எனினும், அதற்கு அருகில் மற்றுமொரு பாதை காணப்படுவதால், அதன் ஊடாக கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்கள் உள்ளே செல்லக்கூடிய நிலை காணப்படுவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, அப்பகுதிக்குள் எவரும் அனுமதியின்றி நுழைய முடியாத வகையில் நிரந்தர வேலிகளை அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்டகாலத் திட்டமிடல் இன்றி கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதிப்பது எதிர்காலத்தில் பாரிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment