தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமா குமரனுக்கு, ரவிகரன் எம்.பி வாழ்த்து;

ஐக்கிய இராச்சியத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமா குமரனுக்கு, ரவிகரன் எம்.பி வாழ்த்து; ஈழத் தமிழர் விவகாரத்திலும் கரிசனையோடு செயலாற்றுமாறும் வேண்டுகோள்

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற இணை அமைச்சராக (Parliamentary Under-Secretary of State) அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான உமா குமரன் அவர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்நோக்கிவரும் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதி, காணி உரிமைகள், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை முழுமையாக மீள நிறுவுதல், நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு மனித நேயமும் நீதியும் சார்ந்த தீர்வைக் காண்பதற்கான பன்னாட்டு முயற்சிகள், சமத்துவம் மற்றும் கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்ட நீடித்த அரசியல் தீர்வு ஆகியவற்றுக்கு ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் புதிய பாராளுமன்ற இணை அமைச்சர் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஆதரவையும் கவனத்தையும் வழங்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் புதிய பாராளுமன்ற இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமா குமரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை “ஐக்கிய இராச்சியத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துகிறோம்” என தலைப்பிடப்பட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற இணை அமைச்சராக (Parliamentary Under-Secretary of State) தாங்கள் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எமது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத்தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலகின் தலைசிறந்த சனநாயக நாடுகளில் ஒன்றான ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தில் இத்தகைய முக்கிய பொறுப்பை ஏற்றிருப்பது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களுக்கும், குறிப்பாக இலங்கையில் வாழும் எமக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. தங்களது இவ்வுயர்வு, பொது வாழ்வில் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் பொதுச்சேவைக்கான உறுதியின் உயரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. அதேவேளை பிரித்தானியாவின் பொதுவாழ்வில் தமிழர் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்புக்கும் இது ஒரு சிறப்பான அங்கீகாரமாக கருதப்படுகின்றது.

தாங்கள் ஏற்றுள்ள புதிய பொறுப்பில் நேர்மை, தொலைநோக்குப் பார்வை மற்றும் மனிதநேயப் பண்புகளுடன் சிறப்பாகப் பணியாற்றி, ஐக்கிய இராச்சிய மக்களுக்கும் பன்னாட்டு சமூகத்துக்கும் பயனுறு பங்களிப்பை வழங்கிட எமது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேவேளை, இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள், நீதி மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் ஐக்கிய இராச்சியம் கடந்த பல தசாப்தங்களாக வெளிப்படுத்திவரும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை நாம் நன்றியோடும் பெரும் மதிப்போடும் நினைவுகூருகின்றோம்.

1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்குப் பின்னர், பாதுகாப்பை நாடிய ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிய புகலிடமும் மனிதாபிமான அரவணைப்பும் அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வு ஆகியவற்றை வலியுறுத்தி பன்னாட்டு அரங்குகளில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தொடர்ச்சியாக ஆற்றிவரும் பங்களிப்பும் எமது மக்களால் பெரும் மதிப்புடன் நினைவுகூரப்படுகின்றன. மேலும், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் நிலைமைகள் பன்னாட்டு சமூகத்தின் கவனத்தில் தொடர்ந்தும் நிலைத்திருக்க பிரிட்டன் ஆற்றிய பங்கும், நீதியையும் கண்ணியத்தையும் நீடித்த சமாதான வாழ்வையும் நாடும் மக்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது.

சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய பொதுவான விழுமியங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த நீண்டகாலக் கொள்கைநிலைப்பாடு தங்களது பதவிக்காலத்திலும் தொடரும் என்பதில் நாம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தங்களது பதவியின் பொறுப்புகளுக்கும் அதிகார வரம்புகளுக்கு அமைவாகவும் பொருத்தமான இராஜதந்திர மற்றும் பாராளுமன்ற வழிமுறைகளின் ஊடாகவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்நோக்கிவரும் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதி, காணி உரிமைகள், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை முழுமையாக மீள நிறுவுதல், நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு மனித நேயமும் நீதியும் சார்ந்த தீர்வைக் காண்பதற்கான பன்னாட்டு முயற்சிகள், சமத்துவம் மற்றும் கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்ட நீடித்த அரசியல் தீர்வு ஆகியவற்றுக்கு தாங்கள் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஆதரவையும் கவனத்தையும் வழங்குவீர்கள் என நாம் மனப்பூர்வமாக நம்புகின்றோம்.

சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய பொதுவான விழுமியங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் ஐக்கிய இராச்சியத்திற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்துவதிலும் தங்களுடன் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமாக இணைந்து செயற்படும் வாய்ப்புகளையும் எதிர்நோக்குகின்றோம்.

தங்களது உயரிய நியமனத்திற்கான எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து, தங்களது அமைச்சுப் பொறுப்புகள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளையும் சிறப்புமிக்க பொதுச்சேவையையும் புரிந்திட உளமார வாழ்த்துகின்றோம்- என குறித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அன்மைச் செய்தி

Leave a Comment