உலக செய்திகள் செய்திகள் 

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் இரு பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

முடக்கப்பட்டு வரும் உதவிகள் குறித்து ஐ.நா. கவலை

 

காசாவில் தொடர்ந்து போர் நிறுத்த மீறலில் ஈடுபடும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பல இடங்களிலும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

காசா நகரின் கிழக்கு மற்றும் துபா பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று (23) குண்டுகளை வீசியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு காசாவின் கான் யூனிஸின் கிழக்கு பகுதி மற்றும் டெயிர் அல் பலாஹ்விலும் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தீவிரமாகவும் திட்டமிட்ட வகையிலும் மீறுவதாக கண்டித்த காசா அரச ஊடக அலுவலகம், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் அதனை இஸ்ரேல் 875 தடவைகள் மீறி இருப்பதாக சுட்டிக்காட்டியது.

இதில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீன வீடுகள், ஏனைய உட்கட்டமைப்புகளை தகர்ப்பது ஆகியவையும் உள்ளடங்குகின்றன. குறைந்தது 265 சம்பவங்களில் இஸ்ரேலிய துருப்புகள் பலஸ்தீன பொதுமக்கள் மீது சூடு நடத்தி இருப்பதாக அந்த அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 1,112 பேர் காயமடைந்திருப்பதாக அது மேலும் தெரிவித்தது.

மறுபுறம் இரண்டு ஆண்டுகள் நீடித்த காசா போரினால் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்காக பலஸ்தீன குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் தங்குமிட வசதிகள் போன்ற உதவிகள் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வருகிறது. காசாவுக்கான உதவி விநியோகங்கள் தடையின்றி செல்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றம் ஏனைய மனிதாபிமான குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன. காசாவில் தற்போது நிலவும் கடுமையான குளிர் மற்றும் மழை வெள்ளம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. இனப்படுகொலை கொள்கையின் ஓர் அங்கமாக பலஸ்தீன மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காசாவுக்கு கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மற்ற விநியோகங்கள் செல்வதை இஸ்ரேல் மறுப்பதாக உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

கடந்த ஒக்டோபரில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் 43,800 உதவி லொறிகள் காசாவுக்குள் வரவேண்டி இருந்தபோதும் கடந்த திங்கட்கிழமை வரை 17,819 லொறிகள் மாத்திரமே வந்திருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்தது. இந்த எண்ணிக்கையின்படி சராசரியாக நாளொன்றுக்கு 244 உதவி லொறிகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும் போர் நிறுத்த உடன்படிக்கையில் 600 லொறிகளை அனுமதிக்க இஸ்ரேல் இணங்கி இருந்ததாக அந்த அலுவலகம் குறிப்பிட்டது. ‘அடைக்கலம் வழங்குவதற்கான பொருட்கள் உட்பட காசாவுக்குள் அனைத்து உதவிகளும் செல்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்’ என ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரசின் பேச்சாளர் ஸ்டபன் டுஜனரிக் திங்களன்று வலியுறுத்தி இருந்தார். ‘கடந்த 24 மணி நேரத்தில், போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவின் ஐந்து நிர்வாகப் பகுதிகளிலும் வான் தாக்குதல்கள், செல் குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இதனால் உயிரிழப்புகளும் பதிவாவதோடு மனிதாபிமான செயற்பாடுகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பற்ற நிலைமையில் வாழும் இடம்பெயர்ந்த குடுப்பங்களுக்கான தற்காலிக இருப்பிட வசதிகளை பூர்த்தி செய்யும் பணியில் ஐ.நா மனிதாபிமான கூட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காசாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தபோதும் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருவதோடு இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 79,937 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment