பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியீடு
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் பல்கலைக்கழக அனுமதிக்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இவ்விண்ணப்பங்கள், பரிசீலிக்கப்பட்ட பின்னர், 42,937 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் புதிய பட்டப்படிப்பு பாடநெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

