அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தட்டுப் பாடு காரணமாக வைத்திய சாலைக் கட்டமைப்பைப் பராமரிப் பதில் கடும் சவால்கள்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரிப்பதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இது குறித்து விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக GMOA தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக நாளை (மார்ச் 17) நாடளாவிய ரீதியிலான பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்த GMOA தீர்மானித்துள்ளது. இதன்போது ஆரம்ப சுகாதார சேவை குறித்த விசேட அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வைத்தியர்களின் கோரிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, வைத்தியர்களின் சேவைத் தேவையின் அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

வைத்தியர்கள் உள்ளிட்ட விசேட தொழில் பிரிவினருக்காகவும், அபிவிருத்தி திட்ட வாகனங்களுக்காகவும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தனித்தனியான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்படும்.வைத்தியர்கள் விசேட சேவையில் ஈடுபடுவதால், அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (Limit) இருக்க வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் கருதுகிறது.

தற்போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதில் உள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகள் இன்னும் சில நாட்களில் முழுமையாகத் தீர்க்கப்படும்.

வைத்தியர்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களின் சேவைக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் இலக்கு என பிரதி அமைச்சர் தெரிவித்தார். எனினும்,  இன்று நடைபெறவுள்ள GMOA-வின் அவசரக் கூட்டத்தின் முடிவுகள் சுகாதாரத் துறையின் அடுத்தகட்ட நகர்வுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்மைச் செய்தி

Leave a Comment