அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ.3.65 கோடி பெறுமதி; தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் பயணி கைது

3 கோடியே 65 இலட்சத்து 19 ஆயிரத்து 192 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைச் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவற்றை வெளியே கொண்டு செல்ல முற்பட்ட இலங்கைப் பயணியொருவர் நேற்றுமுன்தினம் (03) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, பல்லேகல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றுமுன்தினம் (03) காலை 9.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, தனது உடலில் நான்கு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 996 கிராம் எடையுடைய தங்க நகைகளை அவர் கொண்டு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காகக் குறித்த பயணியையும் அவர் கொண்டு வந்த தங்க நகைகளையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று (04) அதிகாலை 4.45 மணி வரை இது தொடர்பான முறையான சுங்க விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

விசாரணைகளின் பின்னர் குறித்த தங்க நகைகளை அரசுடைமையாக்கவும், பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் சுங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

அன்மைச் செய்தி

Leave a Comment