விமான நிலையத்தில் ரூ. 32 கோடி குஷ் பொதிகளை கைவிட்டு தப்பிய பயணி!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப்பொதி பெல்ட் அருகே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரு பயணப் பெட்டிகளிலிருந்து சுமார் ரூ. 320 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருள் இன்று (15) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் குறித்த போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து நேற்றைய தினம் (14) கொழும்பு வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 405 எனும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவராலேயே இந்தப் பயணப்பொதிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விமான நிலையத்தில் வைத்து, தான் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, குறித்த பயணி தனது இரண்டு பயணப்பொதிகளையும் விமான நிலையத்திற்குள் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.
சந்தேகநபரான பயணியை விரைவாக அடையாளம் காண்பதற்காக, விமான நிலையத்தின் CCTV காணொளிகளைப் பரிசீலித்தும், விமான சேவை நிறுவனத்தின் உதவியைப் பெற்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ‘குஷ்’ கஞ்சா பொதிகளை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

