துப்பாக்கி லைசன்ஸ்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்
துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் செயற்பாடுகள் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கிணங்க இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும் துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கிடையில், 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

