இன, மத மோதல் களுக்கு இனி இட மில்லை.! – ஜனாதிபதி
இலங்கையில் மீண்டும் எந்தவொரு இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42ஆவது தேசிய மீலாதுன் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இடம்பெற்ற இன மோதல்களால் இலங்கை பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும், அந்தக் கொடூரமான அனுபவங்களின் பாதிப்பை இன்றைய தலைமுறையினரும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாட்டில் மீண்டும் எந்தவொரு இன மோதலும் உருவாகுவதற்கு இடமளிக்கப்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதித்துறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக வழக்குகள் முடிவுக்கு வராமல் இருப்பதால் மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனைத் தீர்க்க குற்றப் புலனாய்வுத் துறை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களில் சிறிய அளவிலான எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், அவற்றிலிருந்து அரசாங்கம் பின்வாங்காது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், ஏதேனும் தீர்மானத்தில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தால், அதனை மாற்றுவதற்கும் அரசாங்கம் தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்துடனான முக்கிய சேவைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை மக்கள் வீட்டிலிருந்தே இணையவழியாக மேற்கொள்ளக்கூடிய அமைப்பை உருவாக்கி, அரச சேவையை மேலும் திறன்மிக்கதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நபிகள் நாயகத்தின் போதனைகளில் வலியுறுத்தப்பட்ட அமைதி, மனிதநேயம், பொருளாதார சமத்துவம் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆட்சியை மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

