கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள், கடற்றொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும்
மாவட்டClean Sri Lanka செயலணியின் இணைப்பாளருமான மருங்கன் மோகன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நெல் கொள்வனவு தொடர்பாக கருத்து தெரிவித்த விவசாயிகள், கடந்த காலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அறுவடை முடிந்து பல மாதங்களின் பின்னரே சில விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நெல் கொள்வனவையும் ஆரம்பித்துள்ளதுடன், நெல்லுக்கான உத்தரவாத விலையையும் அறிவித்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது தனியார் வணிகர்கள் ஒரு மூட்டை நெல்லை ரூ.5,500 முதல் ரூ.6,200 வரையிலான விலையில் கொள்வனவு செய்து வரும் நிலையில், அரசாங்கம் அறிவித்தபடி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு மூட்டை நெல்லை ரூ.8,450 என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இந்நெல் கொள்வனவு அனைத்து விவசாயிகளிடமும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த விவசாயிகள், அறுவடை ஆரம்பிக்கப்பட்ட உடனேயே நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதற்காக அரசாங்கத்திற்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி.

