பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும்
பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் வைத்தியர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவலங்களுக்கும், 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ள்ளது.
இதனைத் தொடர்ந்து 11.30 மணி முதல் 2.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 மற்றும் 120இன் கீழான இரண்டு தீர்மானங்கள் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
வெளிநாட்டு பணவனுப்பல்களின் பிரகாரம், வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குரியதாக 2022 மே 01ஆம் திகதி தொடக்கம் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட உத்தேச திட்டம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2025 அக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119இன் ஏற்பாடுகளுக்கு அமைய சட்டமா அதிபரின் அவதானிப்புக்கள் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்துவது தொடர்பான தீர்மானமும் விவாதிக்கப்படவுள்ளது.

