தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தித்வா புயலால் பாதிக்கப் பட்ட பாடசாலை களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; ரவிகரன் எம்.பி

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி

மன்னார் – மடுகல்வி வலயத்தில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சீர்செய்வதற்குரிய, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மடு வலயக்கல்விப் பணிப்பாளர், அவ்வாறு இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ள பாடசாலைகளின் பாதிப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் விரைவில் வழங்கப்படுமென வடமாகாண கல்வித்திணைக்களம் தமக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தித்வா புயலால் மடு கல்வி வலயத்தின், மாந்தை மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ள 09பாடசாலைகளில் பாடசாலைப் பொருட்கள் பாதிப்படைந்திருப்பதுடன், 25பாடசாலைகளில் படசாலைக் கட்டுமானங்கள் பாதிப்படைந்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறு தித்வா புயலால் பாதிப்புக்குள்ளான இந்தப் பாடசாலைகளை சீர்செய்வதற்குரிய நிதிகளைப் பெறுவதில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது.

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட அந்தப் பாடசாலைகளின் விபரங்கள் உரிய வகையில் அனுப்பப்பட்டதா? அல்லது, தரவுகளை உரியவகையில் அனுப்பவதில் தாமதங்கள் ஏற்பட்டதா
? அந்த நிதிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என்ன? இதுதொடர்பில் உரியவர்கள் தெளிவு படுத்தவேண்டும் – என்றார்.

இதன்போது மடு வலயக்கல்வி பணிப்பாளர் பதிலளிக்கையில்,

தித்வா புயலினால் ஏற்பட்ட தாக்கம் தொடர்பாக நாம் மன்னார் மாவட்ட செயலருக்கும், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கும் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

மகாணக் கல்வித் திணைக்களம் எம்மால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் பாதிப்பு விபரங்களை இணையவழியில் பதிவேற்றியுள்ளனர். இவ்வாறு இணையவழியில் பதிவேற்றப்பட்ட அனைத்துப் பாதிப்புக்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் விரைவில் கிடைக்கபெறுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வடக்குமாகாண கல்விப்பணிப்பாளருடன் இடம்பெற்ற கூட்டத்திலும் தித்வா புயல் பாதிப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறுமென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது – என்றார்

அன்மைச் செய்தி

Leave a Comment