இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறை நிலைமை கட்டுப் பாட்டுக்குள்;விசேட விசாரணைக் குழுவொன்று நியமனம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் நேற்று (05) இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதலில் இருவர் உயிரிழந்ததோடு, இந்த வன்முறைச் சம்பவத்தின் போது காயமடைந்த சுமார் 35 கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்று அம்பலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட தர்க்கமே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலானது “பூரு மூனா” (Booru Moona) எனும் பாதாள உலகக் கும்பல் தலைவருடன் நெருங்கிய தொடர்புடைய சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சிறைக்குள் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்கிருந்த பெண் கைதிகள் குழுவொன்று சிறை கட்டடத்தின் கூரை மீது ஏறிப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அதனைத் தொடர்ந்து ஆண் கைதிகளும் கூரை மீது ஏறித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது கைதிகள் கூரை மீது நின்றிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக கூரையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 4 கைதிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணிகளுக்காகக் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், சிறைக்கு வெளியே திரண்ட கைதிகளின் உறவினர்கள், உள்ளே இருப்பவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் முறையான தகவல்களை வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளைப் பார்ப்பதற்குப் பொலிஸாரால் உறவினர்களுக்குப் போதிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

அன்மைச் செய்தி

Leave a Comment