திட்டமிட்ட அழிப்பு களிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி
திட்டமிட்ட அழிப்புகளிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி தெரிவிப்பு…..!
”எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது; உலகத்தரம் வாய்ந்த கல்வியோடும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே, திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும்” என அண்மையில், யாழ்/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் கலந்துகொண்ட, நிகழ்வின் பிரதம விருந்தினரும் அப் பள்ளியின் பழைய மாணவனுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
போருக்குப் பின்னரான சூழலில் தமிழ் தேசிய இனம் பல்வேறு நூதனமான மற்றும் திட்டமிடப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வருவதை எம்மால் அவதானிக்கமுடிகிறது.
“யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் சிதைப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன; எமது எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களைச் சீரழிப்பதன் ஊடாக, ஒரு பலவீனமான சமூகத்தை உருவாக்கும் முயற்சிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.”
”நாம் இந்த மண்ணின் பிள்ளைகள்; நமக்கென்று ஒரு வீரம் மிக்க வரலாறும், தனித்துவமான பண்பாட்டு அடையாளமும் உண்டு. அந்த வரலாற்றை உள்வாங்கியவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்.
அந்நிய சக்திகளின் சீரழிவுத் திட்டங்களுக்கு இரையாகாமல், உயர்ந்த ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிப்பதே எமது மிகப்பெரிய பலமாகும். வெறும் புத்தகக் கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல், அறம் சார்ந்த வாழ்வியலை மாணவர்கள் பற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ் தேசிய இனத்தின் எதிர்காலத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமை மிக்க தலைவர்களாக உங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு, பள்ளியின் பழைய மாணவனாக நிகழ்வில் கலந்துகொண்டமை மகிழவைத் தருவதாகவும்” தெரிவித்தார்.
பாடசாலையின் முதல்வர் திரு. கோபாலு பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகப் பள்ளியின் பழைய மாணவனும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சிவஞானம் சிறீதரன் அவர்களும்; சிறப்பு விருந்தினர்களாகத் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜே. எஸ். பேனாட் றெக்னோ, வாண்மை விருத்தி நிலைய ஆசிரியர் திரு. எம். அலக்ஸ்றீன், வாழ்வியல் வளர்ச்சி அமைப்பின் தலைவர் திரு. எஸ். ரீ. பீற்றர்போல் ஆகியோரும்; கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை கிராம அலுவலர் திரு. எஸ். ரட்ணேஸ்வரன், அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் திரு. எம். அன்ரன் மரியதாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

